அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்

21


புதுடில்லி: சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதி பங்களாவில் இருந்து முன்னாள் நீதிபதி சந்திரசூட்டை காலி செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், 2000ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டின் நீதிபதியாக பணியாற்றினார். 2013ல் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆனார். 2016ம் ஆண்டு மே 13ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.


2022ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் 2024ம் ஆண்டு நவ., மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்று இருந்த சந்திரசூட் அயோத்தி விவகாரம், தனியுரிமை, காஷ்மீர் சிறப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஆவார்.



இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதி பங்களாவில் இருந்து முன்னாள் நீதிபதி சந்திரசூட்டை காலி செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவர் தலைமை நீதிபதியாக இருந்த போது வசிப்பதற்காக டில்லியில் 5, கிருஷ்ணா மேனன் மார்க்கில் உள்ள தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் அளிக்கப்பட்டு இருந்தது.
நீதிபதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஓய்வு பெற்றவுடன் அடுத்த ஆறு மாதங்களில் தங்களின் அரசு இல்லத்தை காலி செய்து விட வேண்டும்.

சந்திரசூட் தனது காலக்கெடுவை தாண்டி வசித்து வருகிறார். இதனால் அரசு பங்களாவை காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement