அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்; கட்சி தொடங்கினார் மஸ்க்!

9


வாஷிங்டன்: 'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், 'அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார்.

தற்போது, அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: இன்று அமெரிக்கக் கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்ப கொடுக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்.



2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


''மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது'' என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க்
புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளம் , ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை உலகம் முழுவதும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement