121 ஆண்டுகள் கடந்த பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி; சாதனையாளர்களை உருவாக்கி அசத்தல்

பண்ருட்டியில் கடந்த 1904ம் ஆண்டு அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. 1914ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்பள்ளியின் பெயர் 'போர்டு ைஹ ஸ்கூல்'என அழைக்கப்பட்டது.

கடந்த 1978ம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி இருபாலர் பள்ளியாக இயங்கி வந்தது. பின் ஆண்கள் மட்டுமே பயிலும் மேல்நிலைப்பள்ளியாக செயல்பட துவங்கியது. பண்ருட்டி பகுதியில் வேறு மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததால் மாணவிகள் மேல்நிலைக் கல்வி தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன் காரணமாக இப்பள்ளியில் கடந்த 2007ம் ஆண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவிகள் கல்வி பயில அனுமதி அளிக்கப்பட்டன.

கடந்த 2012ம் ஆண்டில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இருபாலர் பள்ளியாக இயங்கியது. 2018ம் ஆண்டு இதே பள்ளி வளாகத்தை இருபிரிவாக பிரித்து 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பெண்கள் உயர்நிலைப்பள்ளி என தனியாக உருவாக்கப்பட்டன.

121 ஆண்டுகளை கடந்த பள்ளியில் 22 பட்டதாரி ஆசிரியர்கள, 28 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஒவிய ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் என, மொத்தம் 62 பேர் பணிபுரிகின்றனர்.

பள்ளியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் படை, இளம் செஞ்சிலுவை சங்கம், மாணவர் காவல் படை உள்ளிட்ட துணை பிரிவுகள் உள்ளன. பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் மைதானம் உள்ளது.

இங்கு படித்த முன்னாள் மாணவர்கள், நீதிபதியாகவும், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அறிவியியல் நிபுணர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர் மற்றும் மத்திய, மாநில அரசு துறைகளில் முக்கிய பதவி வகிக்கின்றனர்.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

ஆசிரியர்கள் வழிகாட்டி

இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் கூறியதாவது:

இப்பள்ளியில் கல்வி பயின்ற பலர் ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட பலர் முக்கிய பதவிகளில் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் படித்ததை பெருமையாக நினைக்கிறேன். சிறந்த வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களால் நல்ல நிலையில் உள்ளேன். பல அனுபவங்களை பள்ளிக் கற்றுக் கொடுத்தது. எத்தனை பொறுப்புகள் வந்தாலும் , பள்ளியில் படித்த நினைவுகளை என்றென்றும் நிலைத்து நிற்கும்.



தரம் உயர்த்த கோரிக்கை

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜாகீர் உசேன் கூறியதாவது:

இப்பள்ளியில் கல்வி பயின்றதை பெருமையாக கருதுகிறேன். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட, மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சத்தியபாமா பல்கலைக்கழக கல்லுாரியில் படிக்க இலவச சேர்க்கை வழங்கப்படும்.

மெட்ரிக் பள்ளிக்கு இணையாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மாணவ, மாணவிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. காலை சிறப்பு வகுப்பில் பயன்பெறும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உணவு வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

சாதனை மாணவர்களை உருவாக்கியது

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சண்முகவள்ளி பழனி கூறியதாவது:

பழமைவாய்ந்த இப்பள்ளி பல சாதனையாளர்களை உருவாக்கி உள்ளது. மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த பெற்றோர், ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். சமூக ஒழுக்கத்தை கடைபிடிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களுடைய தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், மாணவர்கள் அனைவரையும் சாதனையாளர்களாக மாற்றவும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

Advertisement