சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் ராமேஸ்வரத்தில் வழிபாடு!

ராமேஸ்வரம்: சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று தனுஷ்கோடியில் புனித நீராடி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், தமிழகம் வந்துள்ளார். நேற்று ராமேஸ்வரம் வந்த சுவாமிகள், இன்று (ஜூலை 6ம் தேதி) காலை தனுஷ்கோடி விஜயம் செய்து சங்கல்பம், பூஜை செய்து சங்கமத்தில் ஸ்நானம் செய்து வழிபட்டார். பின்னர் சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் புதிதாக ஶ்ரீ மடம் நிர்மாணிக்க வாங்கியுள்ள இடத்தினை பார்வையிட்டார்.

பின்னர் கோவிலின் பூர்ண மரியாதைகளுடன் அலங்கரிக்கப்பட யானை முன் செல்ல ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற சுவாமிகள், கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தார். ராமநாத சுவாமி கருவறைக்குள் சென்று விஸ்தாரமாக அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம், தீபாராதனை செய்து வழிபட்டார்.
புதிய பட்டு வஸ்திரங்களை சாமிக்கு சமர்ப்பித்து கங்கா அபிஷேகம் செய்து வழிபட்டார்.
பின்னர் அம்பாள் சன்னதிக்கு சென்று குங்குமார்ச்சனை செய்து புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தீப ஆராதனை செய்து வழிபட்டார். அங்கு சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மகா சுவாமிகள் அளித்த ஸ்ரீ சக்கரத்தையும் தரிசனம் செய்து கொண்டார்.
சிருங்கேரி சங்கர மடத்தால் 2016ல் உபயமாக வழங்கப்பட்ட தெற்கு கோபுரத்தையும், அம்மன் சன்னதி முன் மண்டபத்தையும் பார்வையிட்ட சுவாமிகள், அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்து கொண்டார்.
அங்கிருந்து ஶ்ரீ மடத்திற்கு திரும்பிய சுவாமிகள், கூடியிருந்த பக்தர்கள், வேத விற்பன்னர்கள், கோவில் ஊழியர்கள் அர்ச்சகர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார்.
ராமநாதபுரம் குமரன் சேதுபதியின் துணைவியார் ராணி லட்சுமி மற்றும் இளைய மன்னர் மகேந்திர பூபதி, ராம்கோ வெங்கட ராம ராஜா ஆகியோர் தம் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு சுவாமிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
மாலை 3 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சுவாமிகள், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக திருச்செந்தூர் புறப்பட்டு சென்றார்
சிருங்கேரி மடத்துக்கும் ராமநாத சுவாமி கோவிலுக்கும் உள்ள தொடர்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மிகவும் புராதனமான, வரலாற்று சிறப்பு மிக்க, ஸனாதன தர்மத்திற்கு மிக முக்கியமான புனித ஸ்தலமாகும். 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களின் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆதிசங்கரர் காலம் தொட்டு பூஜிக்கப்பட்டு வரும் ஸ்படிக லிங்கமும் அதற்கு செய்யப்படும் அதிகாலை அபிஷேகமும் மிக சிறப்பு மிக்கதாகும்.
சிருங்கேரி சாரதா பீடத்துக்கும் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்குமான தொடர்பு சிருங்கேரி சாரதா பீடம் நிறுவப் பெற்ற முதல் நாளிலிருந்தே தொடங்குகிறது.
ஆதி சங்கரர்
கி.பி., 788-- 820ல் வாழ்ந்த ஆதி சங்கரர் இந்தியாவின் நான்கு ஆம்னாய பீடங்களை முறையே தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம், பத்ரிநாத் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர்
மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஷ்மீரத்தில் சர்வஞ பீடம் ஏறி தமது 32வது வயதில் கேதாரத்தில் இறைவனோடு கலந்தார்.
தான் நிறுவிய நான்கு மடங்களில் தென் திசையில் நிறுவிய சிருங்கேரி சாரதா பீடத்திற்கு ராமேஸ்வரத்தை க்ஷேத்ரம் ஆக ஏற்படுத்தியுள்ளார் என்பது சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலுக்கு சிருங்கேரி சாரதா பீடத்துடன் உள்ள நீடித்த தொடர்பை உணர்த்துகின்றது.
இதனை உறுதி செய்யும் விதமாக பல வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் சிருங்கேரியில் உள்ள பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ வித்யாரண்யர் கோவிலில் சிற்பங்கள் உள்ளன.
சிருங்கேரி சாரதா பீடத்தின் க்ஷேத்ரம் ராமேஸ்வரம் என்பதனை மடாம்னாய சேது [ மடாம்னாய அனுசாசனம்] என்கிற நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவியவரான பகவத்பாத சங்கரராலேயே எழுதப்பட்ட புத்தகம் பதிவு செய்துள்ளது.
கோவிலின் பாரம்பரியம்
இக்கோவிலின் கிழக்கு மதிலுடன் இணைந்தே சிருங்கேரி மடத்தின் கிளை இயங்கி வரும் கட்டிடம் இருந்து வருவதும், ராமநாதசுவாமி கோவிலின் கிழக்கு மதிலில் அமையப்பெற்றுள்ள சிருங்கேரி சங்கர மடத்தின் கிளையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலில் இருந்து குடை மற்றும் பல்லக்கு மரியாதைகள் செய்யப்படுவது திருக்கோயிலில் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று.
இதன் மூலம் சிருங்கேரி மடத்துக்கும் ராமநாதசுவாமி கோவிலுக்கும் உள்ள நீண்ட கால பாரம்பரிய தொடர்பு வெளிப்படுகிறது.
இடைப்பட்ட காலத்திலும் ராமேஸ்வரம் கோவிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்து வந்துள்ளது என்பது கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து அறியப்படுகிறது:
சிருங்கேரி மடத்தில் 11வது பீடாதிபதியாக விளங்கி வந்துள்ள [1333- -1380] ஜகத்குரு ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் [சமாதியிடத்தில்] பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் பாரதி ராமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
சிருங்கேரி மடத்தில் 25வது பீடாதிபதியாக விளங்கி வந்துள்ள ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த பாரதீ ஸ்வாமிகள் கர்நாடக மாநிலம் கூடலியில் ராமேஸ்வரர் என்கிற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
சுவாமிகள் கோவிலுக்கு வருகை
ஸ்ரீ சிருங்கேரி மடத்தில் பீடாதிபதியாக விளங்கி வந்துள்ள ஜகத்குருக்கள் எப்போது தமிழகத்தில் விஜய யாத்திரை செய்தாலும் ராமேஸ்வரம் கோவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம்.
31வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள், 1805ம் ஆண்டு இக்கோவிலுக்கு வந்துள்ளார்.
32வது பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ நரசிம்ம பாரதீ ஸ்வாமிகள், 1838ம் ஆண்டு மற்றும் 1873ம் ஆண்டுகளில் கோவிலுக்கு வந்துள்ளார்.
33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதீ ஸ்வாமிகள், 1894 மற்றும் 1907ம் ஆண்டுகளில் கோவிலுக்கு வந்துள்ளார்.
34வது பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் 1924 - 25ம் ஆண்டுகளில் வந்துள்ளார்.
35வது பீடாதிபதி ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள், 1957, 1965 மற்றும்
1975 [கும்பாபிஷேகம் ], 1987ம் ஆண்டுகளில் கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளார்.
36வது பீடாதிபதி ஜகத்குரு பாரதீ தீர்த்த ஸ்வாமிகள், 1975, 1995, 2001 (கும்பாபிஷேகம்) 2012, 2017ம் ஆண்டுகளில் கோவிலுக்கு வந்துள்ளார்.
36வது பீடாதிபதி ஜகத்குரு பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் தனது சிஷ்யர் விதுசேகர பாரதீ சுவாமிகளுடன் 2017ம் ஆண்டு கோவிலுக்கு வந்துள்ளார்.
33வது பீடாதிபதியான ஜகத்குரு சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ராமநாதபுரம் அரண்மனையில் இருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மனின் வாமாச்சார வழிபட்டு முறைகளை மாற்றி வேத ஆகம முறையான வழிபாட்டை அமைத்துக் கொடுத்தவர் ஆவார்.
@block_B@சேதுபதி மன்னர் காணிக்கை ஸ்வாமிகளிடம் பேரன்பும் பக்தியும் கொண்ட அன்றைய சேதுபதி மன்னர் தமது அரசாங்கம் முழுவதையுமே ஜகத்குருவிடம் பாத காணிக்கையாக சமர்ப்பணம் செய்தார். அப்படி தம்மிடம் அளிக்கப்பட அரசை ஜகத்குரு மீண்டும் சேதுபதி இளவரசரிடமே கொடுத்து அவருக்கு பட்டமளித்து சென்றார் என்பது ராமேஸ்வரம் கோவிலின் பாரம்பரிய நிர்வாக உரிமை பெற்றுள்ள ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வரலாறு காட்டும் செய்தியாகும். block_B
சிருங்கேரி மடத்தின் திருப்பணி
ராமநாதசுவாமி கோவிலின் தெற்கு கோபுரம் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் திருப்பணியாக கட்டித் தரப்பட்டுள்ளது. பர்வத வர்த்தினிஅம்மன் சன்னதியின் கருங்கல் முன் மண்டபமும் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் திருப்பணியே ஆகும். இவையிரண்டும் ஒரு நீண்ட பாரம்பரிய தொடர்பின் காலத்தால் அழியாத சாட்சியங்களாக எப்போதும் விளங்கிவரும்.
இக்கோவில் நடைமுறைகளில் எந்த ஒரு ஐயப்பாடு எழுந்தாலும், எந்த ஒரு திருப்பணி செய்வதானாலும் கும்பாபிஷேகம் நடத்துவது உட்பட, ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் கருத்துரு பெற்று அதனடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகிறது என்பது வெகுகால வழக்கமாகவும் உள்ளது.
1975ம் ஆண்டு மற்றும் 2001ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகங்கள் சிருங்கேரி ஆசார்யார்கள் குறித்துக் கொடுத்த தேதிகளில் அவர்கள் முன்னிலையில் தான் நடைபெற்றன.
ஸ்ரீ ராம நாத சுவாமி மூலவருக்கு கருவறையில் சென்று பூஜை செய்யும் உரிமை சிருங்கேரி சுவாமிகளிடம் தீட்சை பெற்று இக்கோவிலில் பணிபுரியும் மராட்டிய பிராமணர்கள், சிருங்கேரி சுவாமிகள் மற்றும் நேபாள மன்னர்களுக்கும் மட்டுமே உண்டு.
இக்கோவிலில் கருவறையில் பூஜை செய்வதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப் படுகிறது. ராமேஸ்வரத்தில் வாழும் மராத்திய அந்தண இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு வழிபாடுகள் செய்யும் உரிமை உள்ளவர்கள் ஆவார்கள்.
இரண்டாவதாக இவர்கள் சிருங்கேரி ஜகத்குருவிடம் மந்திர உபதேசம், சிவதீட்சை பெற்ற பின்புதான் இக்கோயிலில் குருக்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
சித்தநாத பூபதி Siddhanatha Boobathi - `Ajman,இந்தியா
06 ஜூலை,2025 - 21:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
12 ஆண்டுகள் வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம்; கான்ஸ்டபிளின் நூதன மோசடி
-
பாலியல் வன்கொடுமை செய்யும் திரிணமுல் தலைவர்கள் பட்டியல்: பா.ஜ., அதிர்ச்சி
-
தினமும் இனி 9.15 மணி நேரம் பணி: ஊழியர்களுக்கு இன்போசிஸ் திடீர் உத்தரவு
-
பர்மிங்காமில் வரலாறு படைத்த இளம் இந்திய அணி; ஆகாஷ் தீப் அபாரம்
-
இனி வீட்டில் இருந்தே ஸ்பீட் போஸ்ட் புக்கிங் செய்யலாம்; தபால் துறையின் அசத்தல் திட்டம்!
-
ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஹவுதி குழுவினர் அட்டகாசம்
Advertisement
Advertisement