பர்மிங்காமில் வரலாறு படைத்த இளம் இந்திய அணி; ஆகாஷ் தீப் அபாரம்

2


பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிபர்மிங்காமில் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்தது. கேப்டன் கில் 269 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


180 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, கேப்டன் கில்லின் (161) அபார சதத்தால் மளமளவென ரன்களை குவித்தது. 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் குவித்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால், 608 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.


கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி நேற்று 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. இந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 5ம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.


நீண்டநேரத்திற்குப் பிறகு ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், போட்டி தொடங்கியது. அப்போது, இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். குறிப்பாக, ஆகாஷ் தீப் வேகத்தில் மிரட்டினார். இதனால், இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். ப்ரூக் (23), ஸ்டோக்ஸ் (33) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். முதல் இன்னிங்சை போன்றே, ஜேமி ஸ்மித் மட்டும் ஒருமுனையில் போராடினார்.


ஒரு கட்டத்தில் அவரும் 88 ரன்கள் எடுத்திருந்த போது, ஆகாஷ் தீப் பந்தில் அவுட்டானார். இதன்மூலம், 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். முடிவில் 271 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம், 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

பர்மிங்ஹாமில் இந்திய அணி வென்ற முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக கில் பொறுப்பேற்ற பின்னர் வென்ற முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement