இனி வீட்டில் இருந்தே ஸ்பீட் போஸ்ட் புக்கிங் செய்யலாம்; தபால் துறையின் அசத்தல் திட்டம்!

புதுடில்லி; வீட்டில் இருந்தபடியே விரைவு தபால்களை புக் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்திய அஞ்சல் துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த புதிய திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
அந்த வகையில், விரைவு தபால்களை புக் செய்வதில் புதிய நடைமுறையை அஞ்சல் துறை கொண்டு வர உள்ளது. இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே விரைவு தபால்களை பொதுமக்கள் புக்கிங் செய்து கொள்ளலாம்.
அஞ்சல் துறையின் செல்போன் செயலியை பயன்படுத்தி இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். செல்போன் செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, பணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தி விட வேண்டும்.
அதன் பின்னர், வாடிக்கையாளர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்களோ அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சல்காரர், வீடு தேடி வந்து விரைவு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்தையோ அல்லது பொருளையோ வாங்கிச் செல்வார்.
வாடிக்கையாளர்கள் அனைத்து விவரங்கள் மற்றும் பணத்தை செலுத்தியவுடன் இது சம்பந்தப்பட்ட உள்ளூர் தபால்காரருக்கு டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாறப்படும். அதன்பின்னர், அவர் சம்பந்தப்பட்ட முகவரிக்கே சென்று விரைவு தபால் பார்ச்லை பெற்றுக் கொள்வார்.
அப்போது, பார்சலை பெற்றுக் கொண்டதற்கான சான்றவணத்தை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம், தபால்காரர் அளித்துவிட்டு செல்வார். சான்றவணத்தில் தபால் அனுப்புவரின் டிஜிட்டல் கையெழுத்து நிரப்பப்பட்டு அனுப்பப்படும்.
இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே விரைவு தபாலை அனுப்பிவிட முடியும். மேலும் நேரமும் மிச்சப்படும். இது தவிர, விரைவு தபால்களை மட்டுமல்லாது, பதிவு தபால்கள், பார்சல்கள் போன்றவற்றையும் நுகர்வோர்கள் அனுப்பலாம்.
யாருக்கு அந்த கடிதம் சென்றுசேர வேண்டுமோ, அந்த நபர் கடிதத்தை அல்லது பார்சலை பெற்றுக் கொள்ளும் போது, பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக கையெழுத்திற்கு பதில் அவரை புகைப்படம் எடுத்து பதிவு செய்யும் வசதியும் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
அஞ்சல் துறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில் எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை என்று அஞ்சலக உயரதிகாரிகள் கூறி உள்ளனர்.
வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டும், சேவையை மிக விரைவாக அளிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட உள்ள இத்தகைய சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும்
-
கால்வாய் துார்ந்ததால் கழிவுநீர் தேங்கும் அவலம்
-
மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்
-
சாலையில் கொட்டிய ஜல்லிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
-
1,000 ஆல மரக்கன்று நடும் விழா மாவட்ட நீதிபதி துவக்கி வைப்பு
-
சாலவாக்கத்தில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வலியுறுத்தல்
-
கந்தழீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்