பாலியல் வன்கொடுமை செய்யும் திரிணமுல் தலைவர்கள் பட்டியல்: பா.ஜ., அதிர்ச்சி

கோல்கட்டா: கல்லூரி வளாகங்களில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களை வெளியிடுவேன் என்று பா.ஜ.,தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கோல்கட்டாவில் உள்ள சட்டக் கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா போன்றவர்கள், குறிப்பாக பெண்களை குறிவைத்து செயல்படும் டி.எம்.சி., மாணவர் பிரிவின் 50 தலைவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றார் சுவேந்து அதிகாரி.

கோல்கட்டாவில் இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறியதாவது:

டி.எம்.சி.,யின் மாணவர் பிரிவின் தலைவர்கள் அனைவரும் முதல்வர் மம்தாவின் மருமகனும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கும்பலை சேர்ந்தவர்கள். 2020ல் நான் டி.எம்.சி.,யை விட்டு வெளியேறியதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. அவர்களின் அத்துமீறல்களை நான் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

சட்டக் கல்லுாரி வளாகங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் அபிஷேக் பானர்ஜியின் கும்பலை சேர்ந்த 50 உறுப்பினர்களின் பெயர்களை ஜூலை 8ம் தேதி பிற்பகல் வெளியிடுவேன்.

இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.

Advertisement