இதே நாளில் அன்று

ஜூலை 7, 1859
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கோழியாளம் கிராமத்தில், இரட்டைமலை - ஆதியம்மாள் தம்பதியின் மகனாக, 1859ல், இதே நாளில் பிறந்தவர் சீனிவாசன்.
இவரின் பெற்றோர், சொந்த கிராமத்தில் நிலவிய ஜாதி பிரச்னையால், தஞ்சையில் குடியேறியதால், திண்ணைப்பள்ளியில் படித்தார். அங்கு, இவரின் தந்தை பெயரையும் சேர்த்து எழுதியதால், அதுவே நிலைத்தது. இவரின் சகோதரி தனலட்சுமியை மணந்த அயோத்திதாசரும், இதே கஷ்டங்களை அனுபவித்தார். அதனால், இருவரும் இணைந்து, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை நடத்தி, தாழ்த்தப்பட்ட, 70 ஜாதிகளை இணைத்தனர்.
தென் ஆப்ரிக்கா நாட்டில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். அப்போது, காந்திக்கு தமிழ் கற்பித்தார். நாடு திரும்பி, நீதிக்கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்றதுடன், ஆதிதிராவிடர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்கவும் காரணமானார். சட்டமேதை அம்பேத்கருடன் இணைந்து, தமிழகத்தில் ஜாதி ஒழிப்புக்காக பாடுபட்டார். அதற்காக, லண்டனில் நடந்த, இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றார். இவர், தன், 86வது வயதில், 1945, செப்டம்பர் 18ல் மறைந்தார்.
'ராவ் சாஹிப், ராவ் பகதுார், திவான் பகதுார், திராவிட மணி' பட்டங்களை பெற்ற, ஜாதி ஒழிப்புக்காக பாடுபட்ட, புரட்சியாளர் பிறந்த தினம் இன்று!