சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பீர்பயில்வான் தர்கா பகுதியைச் சேர்ந்த அல்தாப்பின் மகன் நவ்பல், 17; பிளஸ் 2 மாணவர். கடந்த 2ம் தேதி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டருகே தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், 'அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்' எனக்கோரி, அப்பகுதி மக்கள் மறியல், போராட்டம் நடத்தினர்.

மின்வாரியத்தின் அலட்சியம் குறித்து கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர்.

அதன்படி, மின்வாரியம் சார்பில் நிவாரணமாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், உயிரிழந்த மாணவர் நவ்பலின் தந்தை அல்தாபிடம் நேற்று வழங்கினார்.

Advertisement