எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., கால்பந்து காஞ்சி ஒமேகா பள்ளி முதலிடம்

சென்னை:சேத்துப்பட்டில் நடந்த எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., மாநில கால்பந்து போட்டியில், காஞ்சிபுரம் ஒமேகா பள்ளி முதலிடத்தை பிடித்தது.

எம்.சி.சி., பள்ளி, எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து நடத்திய பள்ளி அளவிலான மாநில கால்பந்து போட்டி, சேத்துப்பட்டில் கடந்த 3ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.

போட்டியில், சென்னை, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12 அணிகள், மூன்று பிரிவுகளாக பிரிந்து மோதின. போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் லீக் முறையில் நடந்தன.

கடைசி 'லீக்' சுற்றில், காஞ்சிபுரம்ஒமேகா பள்ளி, 1 - 0 என்ற கணக்கில், திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் அணியை தோற்கடித்தது.

மற்றொரு போட்டியில்,சென்னை டான் போஸ்கோ மற்றும் செயின்ட் மேரிஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 - 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடர்ந்து நடந்த மற்ற அனைத்து லீக் சுற்றுகள் முடிவில், காஞ்சிபுரம் ஒமேகா பள்ளி முதலிடத்தையும், சென்னை டான்போஸ்கோ பள்ளி இரண்டாமிடத்தையும், திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி அசத்தின.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி வீராசாமி, சென்னை கால்பந்து சங்கத்தின் தலைவர் மாதவன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Advertisement