அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்

பீஜிங்; வாழ்நாள் அதிபராக கருதப்படும் சீனாவின் ஷி ஜின்பிங், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரிவுகளுக்கு பிரதிநிதிகளை நியமித்து தன் 12 ஆண்டுகால ஆட்சியில் முதன் முறையாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க துவக்கியுள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில் மக்களாட்சி முறை கிடையாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியே அதிகாரம் பொருந்திய அமைப்பு. அதன் உயர்மட்ட தலைவரே அதிபராகவும், அரசின் பிற முக்கிய பதவிகளுக்கும் வர முடியும்.
அந்த வகையில் கடந்த 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரானவர் ஷி ஜின்பிங், 72. இதையடுத்து 2013ல் சீனாவின் அதிபரானார். அந்நாட்டின் மற்றொரு முக்கிய பதவியான மத்திய ராணுவ கமிஷன் தலைவர் பதவியும் அவர் வசமே உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஒருவர் 10 ஆண்டுகள் நீடிப்பது மரபாக இருந்தது. அரசு நிர்வாகம் மற்றும் ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஷி ஜின்பிங் அந்த மரபை உடைத்தார். இதனால் வாழ்நாள் அதிபர் என ஷி ஜின்பிங் கருதப்படுகிறார்.
இது தற்போது கட்சிக்குள் அதிகார போட்டியை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு வாழ் சீன அதிருப்தி சமூகத்தினரால் தகவல் கசியவிடப்பட்டது.
இந்நிலையில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரமிக்க 24 உறுப்பினர்கள் உடைய அரசியல் குழு கூட்டம் ஜூன் 30ல் கூடியது. கட்சி அமைப்புகளின் பணிகள் குறித்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அதிபர் ஷி ஜின்பிங், 'கட்சியின் மத்திய கமிட்டியின் முடிவெடுத்தல், ஆலோசித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேலும் தரப்படுத்துவதற்கு இந்த விதிமுறைகள் உதவும்.
'இத்தகைய அமைப்புகள் முக்கிய பணிகளுக்கு மிகவும் திறம்பட்ட தலைமை மற்றும் ஒருங்கிணைப்பையும் வழங்க வேண்டும். முக்கிய பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.
இந்த செய்தி சீன அரசு ஊடகத்தில் வெளியானதும், அதிபர் ஷி ஜின்பிங் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க உள்ளதாக ஊகங்கள் பரவியது. 'கொள்கைகள் அடிமட்ட அளவில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் அன்றாட நிர்வாக பணிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை ஷி ஜின்பிங் குறைத்துக்கொள்ள உள்ளதை இது காட்டுகிறது. பெரிய பிரச்னைகளில் அவர் கவனம் செலுத்தக் கூடும்' என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த சீன அரசியல் விவகாரங்களின் நிபுணர் விக்டன் ஷிஹ் கூறினார்.
சீனாவைச் சேர்ந்த அரசியல் நிபுணர்கள், கட்சி அமைப்பில் கொண்டு வந்துள்ள ஒழுங்குமுறைகள் ஷி ஜின்பிங் ஓய்வுக்கு தயாராவதை குறிப்பதாக தெரிவித்தனர்.
மேலும்
-
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு