புகார் அளிக்க சென்றவர் தாக்கப்பட்ட சம்பவம் வீட்டை காலி செய்யும்படி போலீஸ் நெருக்கடி
போரூர்:புகார் அளிக்க சென்ற சண்முகபிரியன் என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் பெரிதாகிவிடக்கூடாது என்பதால், அவரை இரண்டு நாட்கள் புதுச்சேரியில் போலீசார் தங்க வைத்ததும், 25,000 ரூபாய் கொடுத்து, சமரச முயற்சி மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது.
வீடு திரும்பிய சண்முகபிரியன், ''வீட்டை காலி செய்துவிட்டு, வேறு இடத்திற்கு போகுமாறு போலீசார் மிரட்டுகின்றனர்; ஏதாவது செய்து விடுவார்களோ என, எனக்கு பயமாக உள்ளது,'' என, தெரிவித்துள்ளார்.
போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், வசந்தம் நகரை சேர்ந்த சண்முகபிரியன், 30. இவர், இம்மாதம் 2ம் தேதி அதிகாலை, தன்னை சிலர் மிரட்டியது தொடர்பாக, போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சண்முகபிரியனை போலீசார் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இதுகுறித்த விசாரணையில், போரூர் காவல் நிலைய போலீஸ்காரர்கணேஷ் என்பவர், சண்முகபிரியனை அடித்தது தெரியவந்தது. அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
சண்முக பிரியனை பலரும் தேடியபோது, மூன்று நாட்களாக காணவில்லை; அவர் வீட்டிலும் இல்லை.
இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய சண்முகப்பிரியன் கூறியதாவது:
என்னை சிலர் மிரட்டியது தொடர்பாக, போரூர் காவல் நிலையத்தில், 2 ம் தேதி புகார் அளிக்க சென்றேன். அப்போது, போலீசார் என்னை தாக்கினர். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. நான் போலீசில் புகார் அளிக்கவில்லை.
சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் விசாரித்து விட்டு, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீசார் என்னை புதுச்சேரிக்கு அழைத்து சென்று, இரு நாட்களாக அங்கு தங்க வைத்தனர். நான் ஸ்டூடியோ வைத்துள்ளேன். அதை நடத்த விடவில்லை.
யாருடனும் மொபைல் போனில் பேசக்கூடாது; எந்த அழைப்பையும் எடுக்க கூடாது என மிரட்டினர். அங்கு, எனக்கான முழு செலவையும் போலீசாரே பார்த்துக் கொண்டனர்.
வழக்கறிஞர் மூலம் எனக்கு, 25,000 ரூபாய் கொடுத்தனர். கடை மற்றும்வீட்டை காலி செய்துவிட்டு, வேறு எங்காவது போய்விட வேண்டும் என, போலீசார் மிரட்டுகின்றனர்.
போரூர் போலீசார் மட்டுமின்றி, பூந்தமல்லி போலீசாரும் என்னை மிரட்டுகின்றனர். இங்கு வந்தபின், வீட்டு உரிமையாளரை போலீசார் மிரட்டியுள்ளனர்.
போலீஸ்காரர் மட்டுமின்றி, எஸ்.ஐ., ஒருவரும் என்னை தாக்கினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவர்கள் அளித்த, 25,000 ரூபாயை திருப்பி கொடுத்து விடுகிறேன். என்னை வாழ விட்டால் போதும். என்னை போலீசார் பழிவாங்கி விடுவார்கள் என, பயமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்