153வது வார்டு அலுவலகம் ராமசாமி நகருக்கு மாற்றம்

போரூர்:போரூரில் 153வது வார்டு அலுவலகம் புதிதாக கட்டப்படுவதால், அருகே உள்ள ராமசாமி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மண்டலம், 153வது வார்டு போரூர் சக்தி நகர் பிரதான சாலையில், வார்டு அலுவலகம் உள்ளது. தரை, முதல் தளம் அடங்கிய இக்கட்டடத்தில் கவுன்சிலர் அலுவலகம், சுகாதார ஆய்வாளர், உதவி பொறியாளர், வரி வசூலிப்பாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்டோர் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

ஊராட்சியாக இருந்த காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடம், சாலை மட்டத்தைவிட தாழ்வாக இருந்ததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், அலுவலகத்தில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அக்கட்டடத்தை இடித்து புதிதாக கட்ட 2.05 கோடி ரூபாயை, மாநகராட்சி ஒதுக்கியது. வாகன நிறுத்தம், அலுவலகங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

அங்கு செயல்பட்டு வந்த வார்டு அலுவலகம், அருகே உள்ள ராமசாமி நகருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

Advertisement