வல்லப்பாக்கத்தில் ' சிப்காட் ' அமைக்கும் திட்டம் ரத்து இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக தகவல்
காஞ்சிபுரம், வல்லப்பாக்கம் கிராமத்தில் புதிதாக அமைப்பதாக இருந்த 'சிப்காட்' திட்டம் ரத்து செய்யப்படுவதாக, சிப்காட் நில எடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம் உட்பட ஏழு 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள், மூன்று 'சிட்கோ' தொழிற்பேட்டைகள் உள்ளன.
இவற்றின் வளாகத்தில் 1,500க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சென்னைக்கு மிக அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பதாலும், விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை போன்ற போக்குவரத்து வசதிகள் மேம்பட்டிருப்பதாலும், தொழிலதிபர்கள் பலரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழில் துவங்க முயல்கின்றனர்.
அதற்கு ஏற்ப, தமிழக அரசின் தொழில் துறை, சிப்காட் வாயிலாக நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்கிறது.
அந்த வகையில், வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில், புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, 2021ல் அறிவிப்பு வெளியிட்டது.
இது சம்பந்தமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளுடன் பேச்சு மேற்கொள்ளப்பட்டு, நில எடுப்புக்கான அதிகாரிகள் நியமனம் செய்வது உள்ளிட்ட பணிகளை, சிப்காட் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.
மேலும், நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களின் நிலங்களுக்கான இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அவர்களின் நிலங்களை விற்கவும், அடமானம் வைக்கவும் தடை விதிக்கப்பட்டு, பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், வல்லப்பாக்கம் கிராமத்தில் சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பதாக, நில உரிமையாளர்கள், மாவட்ட கலெக்டரிடமும், சிப்காட் அதிகாரிகளிடமும், முதல்வர் தனிப்பிரிவிலும் முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில், வல்லப்பாக்கத்தில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிடுவதாக, சிப்காட் நில எடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வல்லப்பாக்கம் சிப்காட் நில எடுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வல்லப்பாக்கத்தில் சிப்காட் அமைந்தால், ஒரகடம் சிப்காட் வாயிலாக பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்பதால், இப்பகுதி இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், நில உரிமையாளர்கள் ஏக்கருக்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்கின்றனர். தவிர, சிப்காட் அமைய தேர்வான இடம் அருகிலேயே ஏரி உள்ளது.
ஏரி உயரமாகவும், சிப்காட்டுக்கான பகுதி தாழ்வாகவும் இருப்பதால் தொழில் துவங்க பலரும் யோசிப்பர் என்பதாலும், வல்லப்பாக்கம் சிப்காட் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது.
இது சம்பந்தமாக அரசுக்கு கோப்புகள் அனுப்பி, அங்கிருந்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். அரசாணை வந்தவுடன், நில உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்னுடைய 1.5 ஏக்கர் நிலத்தை சிப்காட் அமைக்க எடுத்துக்கொள்வதாக கூறி, நான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். தற்போது அதிகாரிகள், சிப்காட் அமையவில்லை என்கின்றனர். என் நிலத்தை வெளி நபருக்கு விற்க தடையில்லா சான்று உடனே வழங்க வேண்டும். நிலத்தை விற்க முடியாமல், ஆண்டுக்கணக்கில் அவதிப்பட்டு வருகிறேன். தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை வேண்டும்.
-எஸ்.செல்வம், வல்லப்பாக்கம், வாலாஜாபாத்.
மேலும்
-
காசநோய் இறப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் தமிழகம் முன்மாதிரி
-
கொசு ஒழிப்பிலும் வந்துவிட்டது ஏ.ஐ.,
-
காலிஸ்தான் பயங்கரவாதியை நாடு கடத்துகிறது அமெரிக்கா
-
நாளை வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
-
கிடங்கு கட்டுவதற்கு ரூ.25 லட்சம் கடன் வழங்குகிறது கூட்டுறவு வங்கி
-
கூட்டாளி வீட்டில் கோகைன் பதுக்கினோம் போலீசிடம் சிக்கியவர் வாக்குமூலம்