சேப்பாக்கம் மைதானத்தில் டிச., வரை போட்டிகள் ரத்து

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், புல் தரை அமைக்கும் பணி நடப்பதால், டிச., வரை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சேப்பாக்கத்தில், 77,000 சதுரடியில், 36,000 பார்வையாளர்கள் அமரும் வகையில், பழமையான எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது.

மெரினா கடற்கரைக்கு அருகில், வடக்கே வாலாஜா சாலை, மேற்கே பெல்ஸ் சாலை, கிழக்கே பகிங்ஹாம் கால்வாய்க்கு இணையான விக்டோரியா ஹாஸ்டல் சாலை ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது. இங்கு நடக்கும் அனைத்து வகை போட்டிகளுக்கும், பெரும் வரவேற்பு உள்ளது.

தற்போது, புல்தரையை மாற்றியமைக்கும் பணி நடப்பதால், இந்தாண்டு முழுக்க போட்டிகள் நடக்காது.

இது குறித்து, சேப்பாக்கம் மைதான அதிகாரிகள் கூறியதாவது:

கிரிக்கெட் விளையாட மைதானத்தின் அமைப்பு மிக முக்கியம். அந்த வகையில், ஏற்கனவே கொட்டி செப்பனிட்ட மண் தரை, மென்மைத்தன்மையை இழந்துவிட்டது.

மேலும், அதன்மீது புற்கள் வளர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதில் கொட்டப்பட்ட மண்ணை முழுதும் அகற்றிவிட்டு, மீண்டும் புதிதாக செம்மண் மற்றும் களிமண்ணை கலந்து, அவற்றுடன் தேவையான அளவு மணலையும் இட்டு நிரப்பி, மீண்டும் புல் வளர்க்க வேண்டும்.

இந்த பணிகள் முடிய, டிச., வரை ஆகலாம். அதனால், இந்தாண்டு முழுக்க, அங்கு போட்டிகள் நடப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement