டாக்டர் கனவு நிறைவேற உதவிய 'நீட்' தேர்வு: இறுதியாண்டு மாணவர்கள் பேட்டி

கோவை: 'எங்களை போன்ற வசதியற்ற மாணவர்களின் டாக்டர் கனவு நிறைவேற, 'நீட்' தேர்வு கட்டாயம் வேண்டும்' என்கின்றனர், கோவை மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் பயிலும் இறுதியாண்டு மாணவ - மாணவியர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வை அமல்படுத்தியதால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிஉள்ளது.
இன்று பல நடுத்தர குடும்பம் மற்றும் அதற்கு கீழ் உள்ள குடும்பங்களின் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்து, டாக்டராகும் நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு காரணம் நீட் என்பதால், கட்டாயம் தேவை என்கின்றனர் மாணவர்கள்.
எஸ்.சாருமதி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: சேலத்தில் இருந்து இங்கு வந்து படித்து வருகிறேன். அப்பா, ஜவுளி தொழிலாளி. சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து தற்போது டாக்டராகியுள்ளேன். என்னை பொறுத்தவரை நீட் தேர்வு கட்டாயம் வேண்டும்.
எம்.பிரீத்தி ஸ்ரீ, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார். நடுத்தர குடும்பம். அனைவருக்கும் டாக்டராக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஏழை மாணவர்களின் அக்கனவு, மெய்பட நீட் தேவை. இங்கு மட்டுமல்ல எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளிலும், எளிதில் இடம் கிடைக்க நீட் தேர்வு உதவுகிறது. எங்களுக்கு நீட் தேர்வு பெரிய, கடினமான விஷயமாக தெரியவில்லை.
டி.பேரறிவாளன், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்: சென்னையில் இருந்து இங்கு வந்து படிக்கிறேன். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு தயாராகினேன். இன்ஜினியரிங் உள்ளிட்ட பல படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உள்ளது. அப்படியிருக்கையில் நீட் தேர்வு இருப்பதும் தவறில்லை. நீட் தேர்வு இருந்ததால் மட்டுமே இன்று டாக்டருக்கு படிக்க முடிகிறது. அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
ஆர்.பிரவீன்ராஜ், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்: என் தந்தை தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். தனியார் கல்லுாரிகளில் மருத்துவம் பயில்வது, நடுத்தர வர்க்கத்தினருக்கு இயலாத காரியம். நீட் தேர்வு மூலமே அரசு கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. அதன் வாயிலாக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பயில முடிகிறது.
எம்.ஹேமலதா, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: தேனி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து படிக்கிறேன். தந்தை ராணுவத்தில் பணிபுரிகிறார். எங்கள் குடும்பத்தில் நான் முதல் டாக்டர். நீட் பயிற்சி பெற்று படித்தேன். இந்த உலகம் போட்டிகளுடன் தான் உள்ளது. அப்படிப்பார்க்கும் போது, நீட் தேர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நீட் இல்லை எனில், பிளஸ் 2 மதிப்பெண் வைத்து எம்.பி.பி.எஸ்., படித்திருக்க முடியாது.
ஜே.ஆர்.யாழினி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து படிக்கிறேன். தந்தை ஜவுளித் துறையில் உள்ளார். மருத்துவம் படிக்க நீட் பெரிதும் உதவியது. போட்டி இருந்தால் மட்டுமே தகுதி பெற முடியும். எனவே, நீட் தேர்வு கட்டாயம் வேண்டும்.
என்.யுவஸ்ரீ, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: தர்மபுரி எனது சொந்த ஊர். அப்பா சுயதொழில் செய்கிறார். மருத்துவம் என்பது மிகப்பெரிய விஷயம். தனியார் கல்லுாரிகளில் படிப்பது சிரமமான காரியம். அப்படியிருக்கையில் நீட் தேர்வு எழுதியதால், அரசு கல்லுாரியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வுக்கு தயாராகும்போது உயிரியல் பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு, மாணவ - மாணவியர் தெரிவித்தனர்.



மேலும்
-
கடலூரில் கோர விபத்து; பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் இருவர் பலி!
-
சென்னை புகார் பெட்டி
-
14 நாடுகள் மீது புதிய வரிகள் விதித்தார் டிரம்ப்: இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் என அறிவிப்பு
-
விண்வெளிக்கு அனுப்பிய 166 பேரின் அஸ்தி கடலில் மூழ்கியது
-
அமெரிக்காவில் விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி!
-
ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்