சென்னை புகார் பெட்டி

போதை ஆசாமிகளால் தொந்தரவு கண்டுகொள்ளாத போலீசார்
சோழிங்கநல்லுார், மிடில் ஸ்கூல் சாலையில் சுப்பிரமணியம் ஏரி உள்ளது. இங்குள்ள மறைவான பகுதியில், இரவில் மது குடிப்போர் அதிகரித்து வருகின்றனர்.
போதை அதிகமானதும், மிடில் ஸ்கூல் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிஷம்செய்தும், ஆபாசமாக சைகை காட்டியும் அட்டூழியம் செய்கின்றனர்.
பைக்கில் செல்லும் பெண்களையும் வழிமறித்து சீண்டிய சம்பவங்களும் நடந்துள்ளன. போலீசாரிடம் கூறினால், 'பார்க்கிறோம்' என, ஒரே வார்த்தையில் முடித்து விடுகின்றனர். போதை நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவில் மிடில் ஸ்கூல் சாலையை பயன்படுத்தவே அச்சமாக உள்ளது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, போதையில் சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமணி, செம்மஞ்சேரி.
குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மெக்கானிக் கடை அகற்றப்படுமா?
பெருங்குடி மண்டலம், வார்டு 190, பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவில் தெரு மைய பகுதியில், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை அமைந்துள்ளது. இக்குறுகிய சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, சாலையை ஆக்கிரமித்து பழுது பார்ப்பதால், அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
தவிர, பழுது பார்க்கும் போது அதிக இரைச்சலுடன் கூடிய, எண்ணெய் கலந்த கரும்புகை வெளியேற்றப்படுகிறது. இதனால், இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா நோயாளிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இக்கடையை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அருள்முருகன், பள்ளிக்கரணை.
விஸ்வேசபுரம் கிடங்கில் மலை போல் குவிந்துள்ள குப்பை
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், பம்மல் விஸ்வேசபுரத்தில் குப்பை கிடங்கு உள்ளது. மண்டலம் - 1 மற்றும் 2ல் சேகரமாகும் குப்பை, இங்கு கொட்டப்படுகிறது. இந்த கிடங்கு, ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பதால், தொடர்ந்து கொட்ட இடமில்லாமல், மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதனால், தினசரி சேகரிக்கப்படும் குப்பையை சாலை ஓரத்திலேயே கொட்டுகின்றனர். குப்பை வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அருகேயுள்ள கடைக்காரர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- வாகன ஓட்டிகள், பம்மல்.
கூரையில்லாத நிழற்குடை பஸ் பயணியருக்கு சிரமம்
தேனாம்பேட்டை மண்டலம், டி.டி.கே., சாலையில் ஆழ்வார்பேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, பயணியர் வசதிக்காக, மாநகராட்சி சார்பில் துருப்பிடிக்காத இரும்பால் ஆன நிழற்குடை அமைக்கப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், நிழற்குடையின்கூரை முழுதும் சிதிலமடைந்தது. இதையடுத்து கூரை அகற்றப்பட்ட நிலையில், புதிதாக எதையும் மாநகராட்சி அமைக்கவில்லை. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், வெயிலிலும், மழையிலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிழற்குடை கூரையை அமைக்க வேண்டும்.
- பவித்ரன், தேனாம்பேட்டை.
சாலை நடுவே குப்பை தொட்டி வைப்பதால் விபத்து அபாயம்
அண்ணா நகர் மண்டலம், டி.பி., சத்திரம் பகுதியில் குப்பையை சேகரிக்க இரு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. துாய்மை பணியாளர்கள், குப்பை கழிவுகளை எடுத்த பின், சாலையின் நடுவே தொட்டிகளை வைத்து விடுகின்றனர். குறிப்பாக, டி.பி.,சத்திரம், ஐந்தாவது தெருவில் குப்பையை முறையாக கையாளுவது கிடையது. இதனால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறும்பட்சத்தில், தொட்டியின் பிடிமான கம்பியில் இடித்து காயமடைகின்றனர். தவிர, சாலையோரத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டுவதாலே, சாலை நடுவே குப்பை தொட்டி வைக்கப்படுகிறது. பல இடங்களில் குப்பை தொட்டிகளுக்கு சாலையோரத்தில் சிமென்ட் தடுப்புகள் அமைத்திருப்பதுபோல், டி.பி.சத்திரம் பகுதியில் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தரேசன், டி.பி.சத்திரம்
மகப்பேறு மருத்துவமனையில் பெயர் பலகை இல்லாததால் அவதி
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு, ஷெனாய் நகர், புல்லா அவென்யூவில், சென்னை மாநகராட்சியின் பழைய நகர்புற சுகாதார மையம் செயல்பட்டது. இதை நகர்புற மகப்பேறு மருத்துவமனையாக மாநகராட்சி கட்டியது. நான்கு தளங்களை உடைய அடுக்குமாடி கட்டடத்தில், தரை தளத்தில் அவசர பிரிவு, எக்ஸ்ரே பிரிவு மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டது. மேல் தளங்களில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சாதாரண வார்டுகள், ஒரு டயாலிசிஸ் பிரிவு, ஒரு கூட்டரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. கடந்த மாதம் 11ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இக்கட்டடத்தை திறந்து வைத்தார். ஆனால் இம்மருத்துவமனையின் வெளிப்புறத்தில் பெயர் பலகை அமைக்காததால், புதிதாக சிகிச்சை பெற வரும் கர்ப்பிணியர், விலாசம் தெரியாமல் அலைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து மருத்துவமனையில் பெயர் பலகையும், தெரு முனையில் பெயர் பலகையும் வைக்க வேண்டும்.
- துர்கா, ஷெனாய் நகர்
குப்பை அள்ள காசு
பெரம்பூர், பாரதி 2வது சாலையில், சமீபமாக குப்பை கழிவுகள், முறையாக அகற்றப்படுவதில்லை. நாள் கணக்கில் தேங்கும் குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த இடத்தின் பின்னால், மாற்றுத்திறன் குழந்தைகளின் பள்ளிக்கூடமும், அருகிலேயே அரசு தொடக்கப் பள்ளியும் உள்ளன. குப்பை கழிவால் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேட்டால் சிறுவர் - சிறுமியர் பாதிக்கப்படுகின்றனர். குப்பை அள்ள வரும் மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் தெரிவித்தால், சாலையில் உள்ள குப்பையை எடுக்க மாட்டோம் எனக்கூறுகின்றனர். சிலர் காசு கொடுத்தால் தான் எடுப்போம் என்கின்றனர். இந்த தெருவில் குப்பை அகற்றுவதை சென்னை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.
- பிரபு சங்கர், பெரம்பூர்.
பொத்துார் கிராமத்திற்கு சிற்றுந்து சேவை வேண்டும்
ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பொத்துார் ஊராட்சி. இங்கு, டீச்சர்ஸ் காலனி, பெரியார் நகர், செல்வ கணபதி நகர், வள்ளி வேலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 50,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொத்துார் வழியாக செங்குன்றம் வரை செல்லும் தடம் எண்: 62பி என்ற அரசு பேருந்து மட்டும் தான், இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். சில வேளைகளில் அந்த பேருந்தும் சரியாக வருவதில்லை. பொத்துாரில் இருந்து திருமுல்லைவாயில் வரை ஷேர் ஆட்டோவில் ஒரு நபருக்கு 30 ரூபாயும்; தனி ஆட்டோவில் 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு வேளைகளில், சரியான பேருந்து வசதி இல்லாமல் பெண்கள் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், பொத்துார் பகுதிக்கு சிற்றுந்து சேவை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குத்தாலிங்கம், பொத்துார்.
அம்பத்துாரில் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு
அம்பத்துார் டன்லப் அருகே உள்ள வானகரம் சாலையில், டன்லப் மைதானம் அருகிலிருந்து மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிவாசிகள் தங்களது வாகனங்களை, மழை நீர் வடிகால்வாய் மீது ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிறுத்தியுள்ளனர். இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து சென்று, விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாக, லாரி போன்ற கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மழை நீர் வடிகால்வாயின் மேற்பகுதி சேதமடைகிறது. மேலும், மர பொருட்கள், ராட்சத பைப் உள்ளிட்டவையும் அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலாஜி, அம்பத்துார்.
மேலும்
-
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்
-
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
-
மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
ஆடலாம், பாடலாம், ஆனால் இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கலாய்ப்பில் சிக்கினார் சிங்கர் நேகா
-
கோர்ட்டில் குட்டு வாங்கியும் திருந்தாத அதிகாரிகள்: பேனர் கலாசாரத்திற்கு விடிவுகாலம் தான் எப்போது?