ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்

6


சென்னை : 'பல்வேறு துறைகள் வாயிலாக நடந்து வரும் பணிகளை, உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சி மற்றும் அரசு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.


சட்டசபையில் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.


இதற்காக, பல்வேறு துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.



நேற்று ஒரே நாளில், விளையாட்டு, இயற்கை வளங்கள், போக்குவரத்து, உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக்கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழிலாளர் நலன் உட்பட, 10 துறைகளின் செயலர்களுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனையில், சுரங்க கொள்கை உருவாக்குவது, அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடு மற்றும் அவற்றின் நிதி நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், அரசு விடுதிகளின் செயல்பாடு, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் வளர்க்கும் திட்டம், அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்ட செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் விளையாட்டு வளாகங்களின் கட்டுமான பணிகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். பணிகளை விரைவாக முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement