ஜாமின் ரத்து மனு அரசு தரப்பு பதில் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பு தெரிவித்தது.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த சிலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கலாகின.

ஏற்கனவே விசாரணையில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருந்தால் ஜாமினை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட போலீசார் ஏன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதில்லை. தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஐ.ஜி.,ஸ்ரீநாதா ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர். பூர்ணிமா அமர்வு நேற்று விசாரித்தது. ஸ்ரீநாதா ஆஜரானார்.

அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார்: 2024 ஜன.,முதல் 2025 ஜூன் வரை ஜாமினை ரத்து செய்யக்கோரி 355 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 790 மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1181 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஒரு மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு எதிராக பிற மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட போலீசார் ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன.

நீதிபதிகள்: குண்டர் சட்டத்தில் கைது உத்தரவு பிறப்பிக்கும் நடைமுறைக்கு அரசுக்கு அதிக செலவாகிறது.

திருவடிக்குமார்: கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய அவகாசம் தேவை.

நீதிபதிகள்: டி.ஜி.பி.,யிடம் விபரம் பெற்று ஜூலை 28 ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement