ராமதாஸ் தலைமையில் பா.ம.க., செயற்குழு; நிர்வாகிகளை தடுப்பதில் அன்புமணி தீவிரம்

சென்னை: திண்டிவனம் அருகே ஓமந்துாரில், இன்று பா.ம.க., செயற்குழு கூட்டத்திற்கு, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை தடுக்கும் பணியில், கட்சி தலைவரான அன்புமணி ஈடுபட்டுள்ளார்.
பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல் முற்றிய நிலையில், இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர்.
3 அதிகார அமைப்புகள்
அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பா.ம.க.,வில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என, மூன்று அதிகார அமைப்புகள் உள்ளன.
அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவை கலைத்து விட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்தார். அதில் அன்புமணி, அவரது ஆதரவாளர்களான பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.
புதிய நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 5ம் தேதி நடந்தது.
அதைத்தொடர்ந்து, பா.ம.க., செயற்குழு கூட்டத்தை, ஓமந்துாரில் இன்று ராமதாஸ் நடத்துகிறார்.
இதில், பங்கேற்குமாறு, தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் என, 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், 'பா.ம.க., பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி இல்லாமல், கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழுவை கூட்ட முடியாது.
'அப்படி கூட்டினால் அது செல்லாது. ராமதாசால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் தவிர, மற்றவர்கள் அதில் பங்கேற்க மாட்டார்கள். இதை அன்புமணியிடம் அவர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்' என்றனர்.
மேலும், ராமதாஸ் கூட்டியுள்ள செயற்குழு கூட்டத்திற்கு, முக்கிய நிர்வாகிகள் செல்வதை தடுக்க, அவர்களுடன் தனித்தனியாக, அன்புமணி தொலைபேசியில் பேசி வருவதாகவும், பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.
நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், இன்று நடக்கும் செயற்குழுவில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு, கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.
அதிரடி முடிவு
இந்நிலையில், ராமதாஸ் செயற்குழுவை கூட்டியிருக்கும் இன்று, சென்னை பனையூரில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.
ஒருவேளை, ஓமந்துாரில் ராமதாஸ் கூட்டியுள்ள செயற்குழு வாயிலாக, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கினால், பா.ம.க.,வை தன் தலைமையில் இயங்க வைப்பது குறித்து அவர் அதிரடி முடிவுகளை எடுக்கக்கூடும் என, அன்புமணி ஆதரவாளர்கள் கூறினர்.
மேலும்
-
கடலூரில் கோர விபத்து; பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் இருவர் பலி!
-
சென்னை புகார் பெட்டி
-
14 நாடுகள் மீது புதிய வரிகள் விதித்தார் டிரம்ப்: இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் என அறிவிப்பு
-
விண்வெளிக்கு அனுப்பிய 166 பேரின் அஸ்தி கடலில் மூழ்கியது
-
அமெரிக்காவில் விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி!
-
ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்