கடல் ஆமைகள் இனப்பெருக்கம் சென்னை கடற்கரையில் அதிகரிப்பு நடப்பாண்டில் 55,074 குஞ்சுகள் பொரித்தன

சென்னை, வனத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கையால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக வரும் கடல் ஆமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நடப்பாண்டில் மட்டும், 55,074 ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்புடன் கடலில் விடப்பட்டன.

ஆமைகள் இனப்பெருக்கம் என்பது, அவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நிகழ்வாகும். கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, முட்டையிட கடற்கரைக்கு வருகின்றன.

டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், முட்டையிட கரைக்கு வரும் ஆமைகள், மணலில் குழி தோண்டி, முட்டை போட்டு மூடி வைத்து செல்லும்.

ஒரு ஆமை, 140 முதல் 170 முட்டைகள் வரை இடும். முட்டைகள் 45 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இந்த முட்டைகளை, நாய்கள், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறையினர் மூங்கில் குச்சிகளால், முட்டை பொரிப்பகம் அமைத்து பாதுகாக்கின்றனர்.

இதற்காக, பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் மற்றும் பழவேற்காடு கடற்கரைகளில், ஆமை முட்டைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு, 563 ஆமைகள் வந்து 65,649 முட்டைகள் இட்டன. இதில், 55,074 ஆமை குஞ்சுகளாக கடலுக்கு சென்றன. இந்த வகையில், ஏழு ஆண்டுகளில், 2,938 ஆமைகள் வந்து, 3.32 லட்சம் முட்டைகள் இட்டு, 2.85 லட்சம் ஆமை குஞ்சுகளாக கடலில் சென்றுள்ளன.

ஏழு ஆண்டுகளில், இந்தாண்டு தான் அதிக ஆமைகள் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்துள்ளன. இதே காலகட்டத்தில், சென்னையில் 1,400க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. ஆமைகள் இறந்து 5, 6 நாட்களுக்கு பின், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கியது.

இதை வைத்து, தமிழக எல்லையில் ஆமைகள் இறக்கவில்லை. ஆந்திரா உள்ளிட்ட இதர மாநில கடல் எல்லையில் இறந்து, சென்னையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது. காலநிலை மாற்றம் காரணமாக, இந்த நிகழ்வு நடந்துள்ளதாக வனத்துறை கூறியது.

ஆமைகளுக்கான ஏற்ற சூழல்

முட்டை பொரிப்பகத்தில் சுகாதாரமான சூழலை அதிகரித்துள்ளோம். ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன், நாய்களிடம் இருந்து முட்டையை பாதுகாப்பதால், முட்டையிட வரும் ஆமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எவ்வளவு ஆமைகள் வந்தாலும், அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- வித்யாதர்,

வன உயிரின காப்பாளர், சென்னை.

Advertisement