உதவுவது போல நடித்து நேபாள வாலிபரை தாக்கி பணம், போன் பறித்த இருவர் கைது

பூக்கடை, உதவுவது போல நடித்து, நேபாள வாலிபரை தாக்கி, பணம், மொபைல் போன் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 34. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மும்பையில் உள்ள அவரது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரை பார்த்து வர கடந்த 4ம் தேதி மாலை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

மும்பை செல்ல டிக்கெட் பதிவு செய்துவிட்டு, ரயில் நிலையம் வெளியே நின்றிருந்தார்.

அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரிடம் சென்று, 'டாஸ்மாக்' கடை எங்குள்ளது என்று விசாரித்துள்ளார். இருவரும் பிரேம்குமாரை ஒரு ஆட்டோவில் மதுபானக் கடைக்கு அழைத்துச் சென்றனர்.

மது வாங்கிய பின், சென்ட்ரல் ரயில் நிலையம்அருகே ஆட்டோவை நிறுத்தி, மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிரேம்குமார் அவர்களிடம், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை உறுதி செய்து கொடுக்க, உதவி கேட்டுள்ளார்.

உடனே, ஒரு ஆட்டோ ஓட்டுநர் உதவி செய்வதாக கூறி, பிரேம்குமாரின் மொபைல்போனை வாங்கி சென்றார்.

வெகு நேரமாகியும் வராததால், அவருடன்இருந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அவரிடம் அழைத்துச் செல்வதாக கூறி, பிரேம்குமாரை தன் ஆட்டோவில் அழைத்து சென்றார்.

சிறிது துாரம் சென்றபின் ஆட்டோவில் மர்ம நபர் ஒருவர் ஏறி உள்ளார். பின் இருவரும் சேர்ந்து, பிரேம்குமாரை தாக்கி 2,500 ரூபாய் பறித்துக் கொண்டு, கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து பூக்கடை காவல் நிலையத்தில் பிரேம் குமார் புகார் அளித்தார்.

விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட, சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள கார்த்திகேயன், 33, விஷ்ணுபிரகாஷ், 23, ஆகியோரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Advertisement