ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்

2

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கில், சி.ஐ.டி., விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதால், அவசர அவசரமாக பாராட்டு விழா நடத்த, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனுக்கு ஆர்.சி.பி., நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது தெரியவந்துள்ளது.


ஐ.பி.எல்., கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எனப்படும், ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாடும் வகையில், ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.


மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியாகினர். இதுகுறித்து சி.ஐ.டி., - மாஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது.

அழுத்தம்



சி.ஐ.டி., நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சி.ஐ.டி., வட்டாரங்கள் கூறியதாவது:



கடந்த மாதம் 3ம் தேதி பெங்களூரு அணி வெற்றி பெற்றதும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் பெங்களூரு போலீசாரிடம், ஆர்.சி.பி., அணி தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன், விளம்பர பிரிவு தலைவர் நிகில் சோசலே ஆகியோர் பேசி உள்ளனர்.


'ஆர்.சி.பி., அணி வெற்றி பெற்றதை மறுநாளே கொண்டாட வேண்டும்' என கூறியுள்ளனர்.

'பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக நிகழ்ச்சி நடத்த வேண்டாம்' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 'விராட் கோலி, லண்டனுக்கு செல்ல உள்ளார்.



அதனால் உடனடியாக விழாவை நடத்தியே ஆக வேண்டும். தாமதம் ஏற்பட்டால், விழாவில் விராட் கோலி கலந்து கொள்ள மாட்டார்' என, அசோசியேஷன் நிர்வாகிகளுக்கு, நிகில் சோசலே அழுத்தம் கொடுத்துஉள்ளார்.



'மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு இலவச அனுமதி' என்று சமூக வலைதளங்களில் ஆர்.சி.பி., நிர்வாகம் அறிவித்தது. இதனால் மைதானம் முன் ரசிகர்கள் கூடினர்.



கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தலைமைச் செயலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்குவதில் போலீசார் அதிக கவனம் செலுத்தினர்.

இவ்வாறு சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றப்பத்திரிகைக்கு தடை



இதற்கிடையில், தங்கள் மீது பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆர்.சி.பி., நிர்வாகமும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் நேற்று விசாரித்தார். ஆகஸ்ட் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.



அதுவரை விசாரணை அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, தடை விதித்து உத்தரவிட்டார்.

@block_B@

தீர்ப்பாயத்துக்கு எதிராக மனு

சின்னசாமி மைதான கூட்ட
நெரிசல் சம்பவத்திற்காக, பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா உட்பட மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள், ஐ.ஏ.எஸ்., --- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் பெங்களூரு கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், 'போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் நடந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி., அணியே முழு பொறுப்பு' எனக்கூறி, ஐ.பி.எஸ்.,களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற அரசு பரிசீலிக்க உத்தரவிட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் ஆர்.சி.பி., அணி மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 'எங்கள் வாதங்களை கூற வாய்ப்பளிக்காமல் தீர்ப்பாயம் இந்த முடிவுக்கு வந்தது, நீதி வரையறைகளை மீறும் செயல்' என கூறியுள்ளது.block_B

Advertisement