ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நேற்று, ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படும். நேற்று காலை, தங்கக்குடம் மற்றும் வெள்ளி குடங்களில், காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

புனித நீர் நிரம்பிய குடங்களை, கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து, மேளதாளங்கள் முழங்க, ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். வழி நெடுகிலும், பக்தர்கள் நின்று வழிபட்டனர்.

தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்ட அங்கிகளைக் களைந்து, திருமஞ்சனம் செய்யப்பட்டு, பச்சைக் கற்பூரம் பூசப்பட்டது. களையப்பட்ட அங்கிகள் மற்றும் திரு ஆபரணங்கள் சுத்தம் செய்து, பழுது நீக்கப்பட்டது. நேற்று மாலை, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.

இதனால், நேற்றும் இன்றும் மூலஸ்தானத்தில் நம்பெருமாள் சேவை கிடையாது. தைலக்காப்பு சாற்றப்பட்டதால், 48 நாட்கள் நம்பெருமாள் திருவடி சேவையும் கிடையாது.

Advertisement