தமிழக சிறைகளில் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆள் இருக்கு... ஆனால் நியமனம் இல்லை

மதுரை: தமிழகத்தில் 3 சிறைகளில் கண்காணிப்பாளர் பதவி காலியாக உள்ள நிலையில், பதவி உயர்வு தகுதியுடன் ஆட்கள் இருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கைகளால் நியமிக்க முடியவில்லை. இதனால் ஏ.டி.எஸ்.பி.,க்களை 'பொறுப்பு' அதிகாரிகளாக நியமித்து சமாளித்து வருகின்றனர்.


தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்களுக்கு கீழ் ஏ.டி.எஸ்.பி., ஜெயிலர், உதவி ஜெயிலர்கள் பணியாற்றி வருகின்றனர். கண்காணிப்பாளர் விடுமுறை அல்லது அலுவல் நிமித்தமாக சென்றால், ஏ.டி.எஸ்.பி., சிறை நிர்வாகத்தை கவனித்துக்கொள்வது வழக்கம்.



தற்போது திருச்சி, வேலுார், சேலம் சிறை கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக உள்ளன. அந்தந்த சிறை ஏ.டி.எஸ்.பி.,க்களே 'பொறுப்பு' கண்காணிப்பாளராக இருந்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.



கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தயார் நிலையில் இருந்தும் துறை ரீதியான நடவடிக்கைகளால் அவர்களை நியமிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:



கண்காணிப்பாளர் பதவிக்கு சிலர் பதவி உயர்வில் தகுதியாக உள்ளனர். ஆனால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் எடுத்துள்ளார். இதனாலேயே ஏ.டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்.

கண்காணிப்பாளர் பதவியில் நியமிக்க இருவழிகள் உள்ளன. தகுதியானவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கையை டி.ஜி.பி., ரத்து செய்ய வேண்டும் அல்லது தற்போது பணியாற்றுபவர்கள் பதவி உயர்வு பெறும் வரை 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

சிறைகளில் போலீஸ் ஏ.டி.எஸ்.பி.,க்கள்



இதற்கிடையே சிறைகளில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஏ.டி.எஸ்.பி.,க்களை 'அயலக பணியாக' நியமிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சிறைத்துறையை பொறுத்தவரை டி.ஐ.ஜி., சம்பளம் எஸ்.பி.,க்கு ஈடானது. கண்காணிப்பாளரின் சம்பளம் ஏ.டி.எஸ்.பி.,க்கு ஈடானது. எனவே போலீஸ் எஸ்.பி.,யை 'அயலக பணியாக' நியமித்தால் சம்பள பிரச்னை ஏற்படும் என்பதால், ஏ.டி.எஸ்.பி.,க்களை நியமிக்க டி.ஜி.பி., திட்டமிட்டுள்ளார். இது சிறை அதிகாரிகள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


சீர்த்திருத்தம் என்ற பெயரில் சிறை நிர்வாகத்தை போலீஸ் கையில் ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம். இதற்கு அரசு ஒப்புதல் தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.



@block_B@

பெண் ஏ.டி.எஸ்.பி., நியமனம்

மதுரை மத்திய சிறை வளாகத்தில் பெண்கள் சிறை உள்ளது. இச்சிறையை மத்திய சிறையின் கண்காணிப்பாளரே கவனித்து வருகிறார். சோதனை, விசாரணைக்கு செல்வதில் சிரமம் நீடிக்கிறது. இதனால் பெண்கள் சிறைக்கு பெண் அதிகாரியை மட்டுமே நியமிக்க வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மதுரை பெண்கள் சிறைக்கு கண்காணிப்பாளர் பொறுப்பில் ஏ.டி.எஸ்.பி., நீலமணியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.block_B

Advertisement