கையை பிடிப்பீர்களோ; காலில் விழுவீர்களோ 2 கோடி பேர் வந்தாகணும்: த.வெ.க.,

சென்னை : 'காலில் விழுவீர்களோ; கையை பிடித்து கெஞ்சுவீர்களோ எனக்கு தெரியாது; 2 கோடி பேரை கட்சிக்கு உறுப்பினர்களாக சேர்த்தாக வேண்டும்' என, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் அறிவுரை கூறியுள்ளார்.


த.வெ.க.,வுக்கு ஆன்லைன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை மார்ச் மாதம் நடந்தது. அதன்படி, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டதாக, அக்கட்சி தலைமை கூறி வருகிறது.



சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிதாக மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.


இதை பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை துவங்க உள்ளனர். இதற்காக கட்சியினருக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இந்த பயிற்சி நடந்தது.


இப்பயிற்சிக்கு வந்த கட்சியின் மாவட்ட செயலர்களிடம், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் பேசினார்.


அப்போது, 'நீங்கள் மக்கள் காலில் விழுவீர்களோ, அவர்கள் கையை பிடித்து கெஞ்சுவீர்களோ எனக்கு தெரியாது; 2 கோடி பேரை இரண்டு மாதங்களில் கட்சிக்கு உறுப்பினர்கள் ஆக்க வேண்டும்' என உத்தரவாக கூறியுள்ளார்.


பயிற்சி முடித்த த.வெ.க., கட்சியினர், இதனால் குழப்பத்துடன் புறப்பட்டு சென்றனர்.

Advertisement