ஏரியில் குதித்து அலறிய பெண் உயிருடன் மீட்ட இளைஞர்கள்

சிக்கமகளூரு: தற்கொலை செய்து கொள்ள ஏரியில் குதித்து, பின் மனம் மாறி காப்பாற்றும்படி கடவுளை வேண்டிய இளம்பெண் காப்பாற்றப்பட்டார்.

சிக்கமகளூரு நகரின், ராமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா, 22. இவருக்கும், இவரது கணவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக, அவ்வப்போது வாக்குவாதம் நடக்கும். அதே போன்று, நேற்று காலை, தம்பதிக்கு இடையே சண்டை நடந்தது.

மனம் வருந்திய ரஞ்சிதா, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், அல்லம்புரா கிராமத்துக்கு வந்தார். இங்குள்ள ஏரியில் குதித்தார். அப்போது அவருக்கு உயிர் பயம் ஏற்பட்டது. 'ஆஞ்சநேயா என்னை காப்பாற்று, ஆஞ்சநேயா என்னை காப்பாற்று' என, பெருங்குரலில் அலற துவங்கினார்.

இவரது அலறலை ஏரி பக்கத்தில் இருந்த ஹோம்ஸ்டே உரிமையாளர் ரமேஷ் கவனித்தார். ஏரியில் யாரோ பரிதவிப்பதை கண்டு, உடனடியாக அப்பகுதி இளைஞர்களை அழைத்தார்.

அவர்கள் ஏரியில் குதித்து, ரஞ்சிதாவை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததில், கணவரிடம் கோபித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது.

அவருக்கு புத்திமதி கூறி, வீட்டுக்கு அனுப்பினர்.

Advertisement