தலைமை மாற்றம் குறித்து விவாதம்? காங்., மேலிட பொறுப்பாளர் மறுப்பு!

பெங்களூரு: “காங்கிரஸ் ஆட்சியின் தலைமை மாற்றம் குறித்து, எந்த விவாதமும் இல்லை,” என, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒரே மாதிரியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. சிலருக்கு தங்கள் தொகுதிக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டு இருப்பதாக எண்ணம் உள்ளது. இதனால் மனதில் பட்டதை வெளியில் பேசி உள்ளனர்.

எம்.எல்.ஏ.,க்களை தினமும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறேன். அவர்களுக்கு உள்ள கஷ்டத்தை கேட்டுள்ளேன். நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் பிரச்னை சரிசெய்யப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் தலைமை மாற்றம் குறித்து, கட்சி மேலிட அளவில் எந்த விவாதமும் இல்லை. எம்.எல்.ஏ.,க்களிடம் நானும் கருத்து கேட்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டுப் பெற, சித்தராமையா, சிவகுமார் டில்லி சென்றுள்ளனர். கலசா - பண்டூரி கூட்டு குடிநீர் திட்டம்; மேகதாது அணை கட்டும் திட்டம் பற்றி விவாதிப்பர்.

தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு மத்திய அரசு தான் காரணம். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மோடி ஆட்சியில் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாக மட்டுமே உள்ளனர். நாட்டின் மூலதன வருமானம் குறைந்துள்ளது. ஜவுளி வருமானம் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

மூன்று நாட்கள் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திய, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா இன்று டில்லி செல்கிறார். அங்கு சித்தராமையா, சிவகுமாருடன் ஆலோசனை நடத்துகிறார். நான்கு எம்.எல்.சி., பதவியை யாருக்கு வழங்கலாம் என்பது பற்றியும், ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த தகவலை சித்தராமையா நேற்று டில்லியில் உறுதிப்படுத்தினார்.

Advertisement