கொலை முயற்சியில் தப்பிய வாலிபர் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி,: நாட்றம்பள்ளி அருகே, ஏழு பேர் கும்பலால் கை, கால்களை கட்டப்பட்டு தலையில் கல்லை போட்டதில் படுகாயமடைந்த வாலிபர், சிகிச்சை பெற்ற நிலையில் பலியாகினார். அந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அம்பலுாரை சேர்ந்தவர் அசோக்குமார், 28. இவரை கடந்த, 3ம் தேதி கொடையாஞ்சி பகுதி பாலாற்றில், கை, கால்களை கட்டி, தலையில் கல்லை போட்டு, ஏழு பேர் கொண்ட கும்பல், கொலை செய்ய முயற்சித்தது. அம்பலுார் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த அசோக்குமார், வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார். அந்த வழக்கை போலீசார், கொலை வழக்கமாக மாற்றி விசாரிக்கின்றனர்.

இதில் கடந்த, ஜன., 5ம் தேதி அம்பலுாரை சேர்ந்த, 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவத்தில், அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, கொலையான சிறுவனின் தந்தை ஜெயராகவன், சிறுவனின் அண்ணன் பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட, ஏழு பேர் சேர்ந்து, பழிக்குப்பழியாக அசோக் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றது தெரிந்தது.

இதில், தொடர்புடைய கொடையாஞ்சியை சேர்ந்த விஷ்ணு, 20, நாச்சியார் குப்பம் இளவரசன், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அரவிந்த், 19, தனுஷ், 21, அம்பலுார் பெருமாள், 23, ஆகிய மூவரும், கடந்த, 7ல், வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தலைமறைவான ஜெயராகவன், பெருமாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement