ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா

ஸ்ரீநகர்; கேரளாவை பின்பற்றி பள்ளிகளில் இருக்கும் கடைசி பெஞ்ச் பாகுபாட்டை மாற்றும் நடவடிக்கையில் ஜம்முகாஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை இறங்கி உள்ளது.



வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் வெளியாகும் கேரளாவின் மல்லுவுட் சினிமாக்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. எளிமையான படப்பிடிப்பு பின்னணி, குறைவான வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்களே அதற்கு காரணம்.


அண்மையில் இப்படி ஒரு வடிவமைப்புடன் வெளியான ஒரு படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். பள்ளி வகுப்பறையில் முன்வரிசையில் நன்றாக படிக்கும் மாணவர்கள், பின் வரிசையில் ஒழுங்காக படிக்காத மாணவர்கள் அமர்வது என்ற வித்தியாசமான நடைமுறை வழக்கமாக இருக்கிறது.


இந்த முறை மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் நடைபெற்றதாக கதையின் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். குறிப்பாக ஆசிரியர் நடுவில் நிற்க, மாணவர்கள் அவரை சுற்றி அரைவட்ட வடிவில் போடப்பட்டு இருக்கும் பெஞ்சுகளில் அமர்ந்து பாடத்தை கவனிப்பர்.


பெரும் வரவேற்பை பெற்ற இந்த நடைமுறை கேரளாவில் பள்ளிகளில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்த 8 பள்ளிகளில் இதுபோன்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா தொடங்கி வைத்த இந்த முறை தற்போது ஜம்முகாஷ்மீர் வரை தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.


அம்மாநிலத்தில் உள்ள சில பள்ளிகளில் U வடிவ முறையில் பெஞ்சுகள் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. இதை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துமாறு கல்வியாளர்களும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.


அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது; ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் வட்ட வடிவ நாற்காலிகளில் மாணவர்கள் அமர்ந்திருக்க ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடம் எடுப்பர். இப்போது பள்ளிகளில் U வடிவ முறை என்பது மிக சிறந்த யோசனை.


ஜம்முகாஷ்மீர் பள்ளிக்கல்வி துறை இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சரிவிகிதமான கவனிப்பு என்பது மாணவர்கள் தரப்பில் உருவாகும்.கேரளா இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. இங்கும் சாத்தியப்படுத்த வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறி இருக்கின்றனர்.


கல்வியாளர்களின் வலியுறுத்தல்கள் அரசின் காதுகளுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. இதுகுறித்த கல்வி அமைச்சர் ஷகினா இட்டு கூறி இருப்பதாவது:


இந்த U வடிவ முறை எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை அறிய முற்படுகிறோம். கேரள அரசாங்கம் எப்படி நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்வோம். இந்த திட்டம் பற்றியும் அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் விவாதிக்க உள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement