மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்; தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

திருப்பூர்; தமிழக அரசு, கடந்த 2023, செப்டம்பர் மாதம் முதல், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டுவருகிறது.

மகளிர் உரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், பெண்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், பயனாளிகள் தேர்வு செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 15ம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில், விடுபட்டோருக்கான மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு முகாமிலும், நான்கு கவுன்டர்களில், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின்னாளுமை முகமை சார்பில்,விண்ணப்பம் பதிவு குறித்து, தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

முகாமுக்கு வரும் பெண்களிடமிருந்து, குடும்ப உறுப்பினர்களின் ஆதார், நில உரிமை சான்று, நான்கு சக்கர வாகன விவரம், மின் கணக்கீட்டு எண், வங்கி பாஸ்புத்தகம் உள்பட உரிய ஆவணங்களை பெற்று, உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் பெண் ஒருவர் முதியோர் உதவித்தொகை பெற்றாலும், வேறு பெண் நபர் இருப்பின் அவரிடமிருந்து விண்ணப்பம் பெற்று பதிவு செய்யலாம் என, தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement