குலதெய்வ வழிபாடு முக்கியம்: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள்  பேச்சு

கோவை; ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில், சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவம் நடத்த, பிலாஸ்பூர் ஸ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், நேற்று வருகை தந்தார்.

சுவாமிகளுக்கு பக்தர்கள் பூரணகும்பம் கொடுத்து, மலர்களை துாவி மங்களவாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். வேதபாடசாலை மாணவர்கள் சுக்ல யஜூர் வேத பாராயணம் செய்தனர்.

ராமர் கோவிலில் ஆஞ்சநேயர், விநாயகர், கோதண்டராமர் சன்னிதிகளில் தரிசனம் செய்தபின் அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிகள், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்து பேசியதாவது:

இங்கு, சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவம், செப்.,7 வரை நடைபெறும். அனைவரும் நித்ய கர்மாவாக அனுஷ்டானம் செய்ய வேண்டும். அதில்பாகுபாடுகள் தேவையில்லை. சனாதனத்தை பின்பற்றும் இந்துக்களாக இருந்தால் போதும்.

நம் நாட்டிலுள்ள தட்சிண ஷேத்ரங்களில், தர்மகாரியங்கள் தடையின்றி தொடர்கிறது. அதற்கு காரணம், நம் நாட்டில் உயிர்ப்பெற்றுள்ள சனாதன தர்மம்தான். இது ஆதிகாலம் முதலே தொடர்ந்து வருகிறது. அந்த வைதீகத்தை சேர்ந்தவர்கள் தான் நாம்.

சாதுர் மாஸ்ய வ்ரத மஹோத்ஸவத்தில் நடைபெறும் சந்திரமவுலீஸ்வர பூஜைகளில், இந்துக்களாக இருக்கும் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதற்கென்றுள்ள ஆகார நியமனங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

ஒரு பட்சத்தை ஒரு மாதமாக கணக்கிட்டு, நான்கு பட்சத்தை நான்கு மாதங்களாக கணக்கிட்டு விரதத்தை தொடர வேண்டும். விரதகாலம் முடியும் வரை நான் இங்கேயே இருப்பேன்.

பிதுர்கர்மாவை சரியாக ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும், குலதெய்வ வழிபாடும் முக்கியம். அதன் பின்புதான் மற்ற பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும்.

அனைவரும், 60 நாட்கள் விரதத்தை தொடர வேண்டும். அதற்கு மனம் என்ற குரங்கு சரியானால் புத்தி சரியாகும். புத்தி சரியானால், மனம் குடியிருக்கும் உடல் பரிபூரணமாகும். சந்திரமவுலீஸ்வரர் தீர்த்த பிரசாதம் பெற்றால், சித்தசுத்தி ஏற்பட்டு மனமும், உடலும் சுத்தியாகும்.

ஊர் கூடி தேர் இழுத்தால், லோகஷேமம் ஏற்படும். குடியிருக்கும் ஊரும், குடும்பமும் ஷேமமாகும். அதனால் சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவம், நாளை காலை 9:00 மணிக்கு துவங்கும். அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement