மகாமக விழாவை தேசிய விழாவாக அறிவிக்க குழு அமைப்பு

தஞ்சாவூர்: ''மகாமக விழாவை தேசிய திருவிழாவாக அறிவிப்பதற்கு, அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் குழு அமைக்கப்படும்,'' என, அகில பாரத ஹிந்து மகா சபாவின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாரங்கபாணிப்பேட்டையில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நேற்று தரிசனம் செய்த, பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

அகில பாரத ஹிந்து மகா சபாவின், முயற்சியால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை, இந்திய தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் இரண்டு, முறை ஆய்வு செய்துள்ளனர்.

எனவே, வரும் 2028ம் ஆண்டு மகாமக விழாவிற்குள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும், எமதீர்த்த குளத்தை துார்வாரி, சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இதே போல், சிதிலமடைந்து காணப்படும், மானம்பாடி நாகநாத சுவாமி கோவிலில் உள்ள சிற்பங்கள், கற்கள் மேலும், சேதமடைவதற்குள் விரைந்து, திருப்பணியை துவங்க வேண்டும். பாபநாசம் அருகே ஒன்பதுவேலியில் கிராம மக்கள் ஒன்றிணைந்து கட்டப்படும் கோவிலுக்கு அறநிலையத்துறை தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும்.

வரும், 2028ம் ஆண்டு, மகாமக விழாவை தேசிய திருவிழாவாக அறிவிப்பதற்கும், இவ்விழாவிற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய, அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் குழு அமைத்து பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement