இந்தியாவின் கழுத்தில் சீன கத்தி

1

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடமான மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே, வங்கதேசத்திற்கு சொந்தமான பழைய விமான தளத்தை சீனா புதுப்பித்து வருவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

குஜராத்தின் போர்பந்தரில் இருந்து அசாமின் சில்சாரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 27ல், மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே மிகவும் குறுகியதாக இருக்கும்.

வடக்கே நேபாளத்துக்கும், தெற்கே வங்கதேசத்துக்கும் இடையே குறுகியதாக இருக்கும் இப்பகுதியை, 'கோழியின் கழுத்து' என்று அழைப்பர். அதாவது, கோழியின் கழுத்தைப் போல குறுகியதாக இருக்கும்.

ரயில் பாதை



சிலிகுரியில் உள்ள இந்த 22 கி.மீ., நீள வழித்தடம், வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. வடகிழக்கைச் சேர்ந்த 4.4 கோடி மக்களுக்கும், நாட்டின் 8 சதவீத நிலப்பரப்புக்கும் இந்த வழித்தடம் மிகவும் முக்கியமானதாகும்.

இதே போல், இங்கு உள்ள ஒற்றை அகல ரயில்பாதை வழியாக பெரும்பகுதி ரேஷன் பொருட்கள், எரிபொருள் மற்றும் வெடி மருந்துகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒரு ரயில் தடம் புரண்டாலும், மொத்த பிராந்தியமும் தடுமாறி போகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அருகே, நம் அண்டை நாடான வங்கதேசம், இரண்டாம் உலகப் போரின் போது கைவிட்ட விமான தளத்தை தற்போது சீரமைத்து வருகிறது.

விமான தளம் உள்ள லால்மோனிர்ஹட் பகுதி, சிலிகுரியிலிருந்து 135 கி.மீ., தொலைவில் உள்ளது. அதை, சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் வங்கதேசம் கட்டியெழுப்புகிறது.

சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இங்கு 4 கி.மீ.,க்கு புதிய ஓடுபாதை போடப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன. இது, சீனாவின் ஜெ - 20 மற்றும் ஒய் - 20 போர் விமானங்களை இயக்க போதுமானது.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு மாறியதும், வங்கதேசத்தின் வெளியுறவு கொள்கையும் மாற்றம் கண்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான், சிலிகுரிக்கு அருகே உள்ள விமான தள புதுப்பிப்பு.

ஷேக் ஹசீனாவுக்கு பின் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவியேற்ற முகமது யூனுஸ், சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

கடந்த மார்ச்சில் சீனா சென்றிருந்த இவர் பீஜிங்கில் பேசுகையில், 'நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் வடகிழக்கிற்கு ஒரே கடல் பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளது' என குறிப்பிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் கழுத்தை குறிவைக்கும் வகையில் போர்க்கால விமான நிலையத்தை மீட்டெடுத்து வருகின்றனர்.

இதற்கு, நம் நாட்டின் தரப்பில் பல வகைகளில் பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலிகுரிக்கு மேற்கே இந்திய விமானப் படையின் எஸ் - 400 வான் பாதுகாப்பு அமைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரபேல் போர் விமானங்களின் பயிற்சி, சூப்பர்ஸானிக் ஏவுகணையின் சோதனை ஆகியவை நடத்தப்பட்டன.

ராணுவத்தின் 33வது படைப்பிரிவு தலைமையகமான சுக்னா அருகே பிரம்மோஸ் ஏவுகணை பிரிவு சத்தமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. புதிய ரயில் மற்றும் நெடுஞ்சாலை பணிகள் 24 மணி நேரமும் நடக்கின்றன.

முடங்கிவிடும்



டீஸ்டா நதிப்படுகையின் கீழ், அனைத்து வானிலையிலும் செல்லும் படியான இரு சுரங்கப்பாதைகள் துளையிடப்படுகின்றன. சிலிகுரியின் திறந்த சாலை தாக்கப்பட்டால் இந்த சுரங்கப் பாதைகள் கைகொடுக்கும்.

ராணுவ நிபுணர்கள் கூறுகையில், தளவாடங்களை வைத்து போரில் பாதி வெற்றி தான் அடைய முடியும். ஒரு துல்லிய தாக்குதல் அல்லது சாலை முடக்கம் வடகிழக்கிற்கான நில வழித்தடத்தை பல நாட்கள் முடக்கிப்போட்டுவிடும்.

ஏற்கனவே சீனா நம் மற்றொரு அண்டை நாடான பூட்டானிடம், டோக்லாம் பீடபூமியை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்தது. இந்த மலைத்தொடர் ராணுவமயமானால், சிலிகுரியின் முழு அகலத்தையும் சீன பீரங்கிகளால் கட்டுப்படுத்த முடியும்.

கடந்த 2017ல் சீனப் படைகள் டோக்லாமை முடக்கின, இதனால் பூட்டான், நம் ராணுவத்தின் உதவியை நாடியது. இந்தியப் படைகள் நகர்ந்த பிறகே சீன வீரர்கள் வெளியேறினர்.

தற்போது வங்கதேசத்தில் புதுபிக்கப்படும் லால்மோனிர்ஹாடும் இணைந்தால், சீனாவின் கைக்கு கிடுக்கிப்பிடி கிடைத்தது போல் ஆகிவிடும். அதை அவர்கள் பயன்படுத்த தேவையில்லை; வெறுமனே பிடித்திருந்தாலே போதும்.

இந்த பிரச்னையில் பொருளாதாரமும் களத்தில் இறங்கியுள்ளது. வங்கதேச ஏற்றுமதிகளுக்கான துறைமுக முன்னுரிமை அணுகலை, மத்திய அரசு கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது. இதனால், அந்நாட்டிற்கு ஒரே காலாண்டில் 1,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

டீஸ்டா நதியில் 8,500 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் கட்ட சீனாவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால், மேற்கு வங்க விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

எனவே, சிலிகுரி வழித்தடத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக கலாடன் எனும் கடல், நதி, சாலை வழி திட்டத்தை முடிக்க இந்தியா மும்முரமாக உள்ளது.

இது முடிவடைந்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை, கொல்கட்டாவில் இருந்து நம் அண்டை நாடான மியான்மர் வழியாக மிசோரமுக்கு அனுப்ப முடியும்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement