குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: 5 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து 11 பேர் பலி

வதோதரா: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலியாகினர்; ஐந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.

மத்திய குஜராத் - சவுராஷ்டிராவை இணைக்கும் வகையில், வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மேல் கம்பீரா பாலம் உள்ளது. 1 கி.மீ., நீளமுள்ள இந்த பாலத்தில், 23 துாண்கள் உள்ளன.

1985ல் திறக்கப்பட்ட இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதையடுத்து, அதன் அருகிலேயே, 212 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைப்பதற்கு மாநில முதல்வர் பூபேந்திர படேல், மூன்று மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தார். புதிய பாலத்தின் வடிவமைப்பு மற்றும் டெண்டர் பணிகள் சமீபத்தில் துவங்கின.

இந்நிலையில், பாலத்தின், 10 முதல் 15 மீட்டர் நீளமுள்ள, 'சிலாப்' நேற்று காலை 7:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆற்றில் விழுந்ததாக வதோதரா கலெக்டர் அனில் தமேலியா தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்த ஒன்பது பேர் மீட்கப்பட்டனர். உடைந்த பாலத்தின் விளிம்பில் அபாயகரமாக நின்றிருந்த லாரி உட்பட இரண்டு வாகனங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் நிதி உதவியும் அறிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த சாலை கட்டுமானத் துறைக்கு, முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். பாலம் இடிந்ததற்கான காரணம் குறித்து, தலைமைப் பொறியாளர், பாலம் வடிவமைப்பு குழு மற்றும் நிபுணர்கள் குழு விசாரித்து விரிவான அறிக்கையை வழங்க உத்தரவிட்டார்.

Advertisement