ரோடு ஆக்கிரமிப்பால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோடு, ஒன்றிய அலுவலக ரோடு என ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் படாதபாடு படுவது, வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்து வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் என காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

காரியாபட்டியில் முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை மதுரை - அருப்புக்கோட்டை ரோட்டில் இருபுறங்களிலும் காய்கறிகள் சந்தை ஏற்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் கடைக்காரர்கள் ரோடு வரை ஆக்கிரமித்துள்ளனர். இரு வாகனங்கள் விலகிச் செல்ல சிரமம் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்திற்கு கடும் நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.

அது போன்ற இடங்களை கடக்க வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும், இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கும் சண்டை ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பள்ளி வளாகம் முன் ரோட்டில் காய்கறி சந்தையை ஏற்படுத்தி மாணவிகளுக்கு இடையூறு செய்கின்றனர். மாணவிகள் செய்வதறியாது சிரமப்படுகின்றனர். அதேபோல் ஒன்றிய அலுவலக ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கியுள்ளது.

அதிகாரிகள் வாகனங்களில் சென்று வருவதுசவாலாக இருந்து வருகிறது. ஆட்கள் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர். பெரும்பாலான வீதிகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் பள்ளமாக உள்ளது. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வீதிகளை சீரமைக்க வேண்டும்



பாஸ்கரன், விவசாயி: குடிநீர் குழாய் பதிக்க வீதிகளில் தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடவில்லை. ஆட்கள் நடந்து சென்றால் இடறி விழுகின்றனர். வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. பேவர் பிளாக் கற்களை சிலர் திருடி செல்கின்றனர். மழை நேரங்களில் சேறும் சகதியுமாக மாறி வருகிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்



திருமலை, தனியார் ஊழியர்: மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். நடமாடும் காய்கறி கடைகள், தெருவோர காய்கறி கடைகள் என ரோட்டில் வைத்து விற்பதால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோட்டில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி வளாகம் முன் உள்ள காய்கறி கடைகளால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பால் விபத்து அச்சம் உள்ளது. விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனங்கள் செல்ல சிரமம்



சுரேஷ், தனியார் ஊழியர்: ஒன்றிய அலுவலக ரோட்டில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பால் ரோடு சுருங்கியது. அதிகாரிகள் வாகனங்களில் சென்றுவர முடியவில்லை. கடைக்கு வருபவர்கள் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்தி ஆட்கள் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

அத்துடன் கடைக்காரர்களும் பொருட்களை போட்டு மறித்து வருவதால் வாகனங்கள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. முற்றிலும் ஆக்கிரமிப்பை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிக்காத படி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

Advertisement