விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நவீன தங்கும் அறைகள் அறிமுகம்

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணியரின் வசதிக்காக, 'ஸ்லீப்பிங் பாட்ஸ்' எனப்படும் நவீன தங்கும் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நீண்டதுார பயணங்கள் மேற்கொள்ளும் பயணியரின் நலனை கருத்தில் வைத்து முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'ஸ்லீப்பிங் பாட்ஸ்' எனப்படும் 'கேப்ஸ்யூல்' வடிவிலான படுக்கை அறைகள், ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியை, ரயில் நிலையத்தின் மூன்றாம் நுழைவு வாயிலின் நடைமேடை எண்: 1ல் பயணியர் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலவச வை - பை
இதற்காக, 88 அறைகள் அடங்கிய ஸ்லீப்பிங் பாட்ஸ் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒருவர் மட்டுமே தங்கக்கூடிய 73 அறைகளும், இரண்டு பேர் தங்கக்கூடிய வகையில் 15 அறைகளும், பெண்களுக்கு என 18 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் பயணியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள், இலவச வை-பை, சார்ஜிங், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அறைகளை மூன்று மணி நேரம் வரை பயன்படுத்த 200 ரூபாயும், 24 மணி நேரம் பயன்படுத்த 400 ரூபாயும், இருவர் பயன்படுத்தும் அறைகளுக்கு முறையே 300 மற்றும் 600 ரூபாய்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
ஸ்லீப்பிங் பாட்ஸ் அறை வசதியை, ரயில் பயணியர் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நடவடிக்கை
எனவே, ரயில் டிக்கெட் அல்லது பிளாட்பாரம் டிக்கெட் இல்லாதவர்கள் கூட இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஸ்லீப்பிங் பாட்ஸ் அறைகளுக்கு பயணியர் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யும் வசதியும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@block_B@
ஸ்லீப்பிங் பாட்ஸ் என்பது ஒரு சிறிய, 'கேப்ஸ்யூல்' போன்ற தனிப்பட்ட படுக்கை இடமாகும். சிறிய இடத்தில் ஒருவரோ அல்லது இருவரோ படுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது, தங்கும் அறைகளை விட அமைதியான சூழலை ஏற்படுத்தும். நீண்டதுாரம் பயணிப்பவர்களுக்கு, பட்ஜெட் விலையில் தங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.block_B

மேலும்
-
மூளையை கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும்; சீன விஞ்ஞானிகள் புது முயற்சி
-
முழுமையான பா.ஜ.,வாகவே மாறிவிட்டார் பழனிசாமி; சண்முகம்
-
சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்: மத போதகர் உட்பட மூவர் கைது
-
85 வயதிலும் சும்மா இருக்க மனமில்லை லட்சுமியம்மாவுக்கு!
-
'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து