சீனாவின் கடன் வலையில் வங்கதேசம்: இந்தியாவுக்கு புதிய தலைவலி

டாக்கா: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி சீனா எவ்வாறு அந்நாட்டை தன் செல்வாக்கின் கீழ் வைத்துள்ளதோ, அதே போல் வங்கதேசத்தையும் தன் கடன் வலையில் விழச்செய்து, இந்தியாவுக்கு குடைச்சல் தர முயற்சிக்கிறது.
நம் அண்டை நாடான சீனா, நம் நாட்டின் உலகளாவிய செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கும், ஆசியாவில் தன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு முயற்சிகளை நீண்ட காலமாக எடுத்து வருகிறது. அதில் தற்போது கடன் உத்தியை கையில் எடுத்துள்ளது.
இது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது: முதலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சீனா தன் கடன் வலையில் வீழ்த்தியது. ஆனால் கொரோனா காரணமாக இரு நாட்டின் பொருளாதார நிலைமைகளும் மோசமடைந்தன. இலங்கை கடனை திருப்பி தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
பாகிஸ்தான் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவியை பெற்று தற்போது அரசை நடத்தி வருகிறது.
சீனாவிடம் பாகிஸ்தான் பெற்ற கடனை அடைக்க 40 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதுவரை பாகிஸ்தான் மீதான பிடியை சீனா விடாது. அந்நாட்டை இந்தியாவுக்கு எதிராக தேவையான சமயங்களில் பயன்படுத்தும்.
கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நம் ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்கியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சீனா, ராணுவ உதவிகளை வழங்கியது.
இந்தியா - பாகிஸ்தான் மோதலை சீனா தன் ஆயுதங்களை சோதிக்கும் களமாக பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
இந்நிலையில், நம் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டத்தால், கடந்தாண்டு ஆகஸ்ட் 5ல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவுடன் நல்ல நட்புறவை பேணியவர். அவர் பதவி இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இங்கு உள்ள மக்களின் எண்ண ஓட்டம் குறித்து பிரிட்டனின் சர்வதேச உறவுகளுக்கான ராயல் சொசைட்டி நிறுவனத்தின் கீழ் செயல்படும் சாதம் ஹவுஸ் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 75 சதவீத மக்கள் சீன ஆதரவு மனநிலையில் உள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே இந்திய ஆதரவு மனநிலையில் இருப்பது தெரியவந்தது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான சச்சரவுகள் மேம்போக்காக பார்த்தால் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட பிரச்னை போல் தோன்றும். ஆனால் அதை ஆராய்ந்தால் அதில் சீனாவின் கைவண்ணம் இருப்பது தெரியவருகிறது.
அதற்கு ஏற்ப வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். கடந்த, 1971ல் பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்த பின், முதன் முறையாக பாகிஸ்தான் உடன் வர்த்தக உறவை ஏற்படுத்தியுள்ளார்.
வங்கதேசத்தின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளதால் சீனாவிடம் தொடர்ந்து கடன் பெற்று வருகின்றனர். சீனாவிடம் இருந்து 2023 வரை, 51,000 கோடி ரூபாயை வங்கதேசம் பெற்றுள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் 17,500 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதை 30 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதன் வாயிலாக வங்கதேசத்தையும் தன் செல்வாக்கின் கீழ் சீனா கொண்டு வந்துள்ளது.
தற்போது சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியுள்ளன. கடந்த ஜூன் 19ல் சீனாவின் குன்மிங் பகுதியில் மூன்று நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்தனர். நம் நாடு முக்கிய பங்கு வகித்த சார்க் அமைப்பு, 2016ல் ஜம்மு காஷ்மீரின் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் செயலிழந்தது. அதற்கு இணையான ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து சீனாவில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகள் அமைப்பில் மேற்கு ஆசிய நாடான துருக்கியும் இணைந்துள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போதே பாகிஸ்தான், துருக்கி வழங்கிய ட்ரோன்களை நம் நாட்டின் மீது ஏவியது.
இந்நிலையில், வங்கதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் தொடர்பான பேச்சில் துருக்கி ஈடுபட்டுள்ளது. வங்கதேசத்தில் மிகக் குறைந்த செலவில் ஆயுதத் தயாரிப்பு ஆலை அமைப்பதே இந்த பேச்சின் நோக்கம். இந்த காரணிகள் அனைத்தும் நம் நாட்டுக்கு பலவீனத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.











மேலும்
-
வயது ஒரு தடையில்லைங்க... நீட் தேர்ச்சி பெற்ற மூத்த குடிமக்கள் 3 பேர் எம்.பி.பி.எஸ்.,க்கு விண்ணப்பம்!
-
கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!