டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்

2

சென்னை: “அரசு பணிக்கான தேர்வில், சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது என்று, வினாத்தாள் தயாரிப்பவர்களிடம் தெரிவிப்பட்டு உள்ளது. அதுபோன்ற கேள்விகளை தயாரிப்பவர், வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்து நீக்கப்படுவார்,” என, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.


டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 4' தேர்வு நேற்று மாநிலம் முழுதும் நடந்தது. சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை, தேர்வாணைய தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

பின், அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும், 4,922 மையங்களில், 13.89 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 பதவிகளில், 3,935 குரூப் - 4 பதவிகளை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

வாய்ப்பு



தேர்வு முடிவு, அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும். அதற்கு முன் வெளியாகவும் வாய்ப்புள்ளது. மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும். குரூப் - 1 தேர்வு முடிவு, இரு மாதங்களில் வெளியிடப்படும். கடந்த ஆண்டில், 10,701 பேரும், இந்தாண்டில் இதுவரை 11,027 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் ஏழு தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐந்து தேர்வுகள் முடிவடைந்துள்ளன.



குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வுகள், இரு மாதங்களில் நடத்தப்படும். மதுரையில் குரூப் - 4 வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் தவறானது. அனைத்து வினாத்தாள்களும் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு சேர்க்கப்பட்டன. 'சீல்' வைக்கப்பட்ட வினாத்தாள், விடைத்தாளை மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, வருவாய் துறை, காவல் துறை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் உடன் செல்வர்.

நீக்கப்படுவார்



தேர்வில், வினாக்கள் சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்படுவதில்லை. இருப்பினும், அரசியல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்கப்படுவதாக தகவல் வந்தது.
எனவே, சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக்கூடாது என, வினாத்தாள் தயார் செய்யும் பேராசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது போன்ற கேள்வி தயாரிப்பவர், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்து நீக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement