'நைஸ்' ரோடு சுங்க கட்டணம் செயலர், இயக்குநர் மோதல்

பெங்களூரு: நைஸ் ரோட்டில் சுங்க கட்டணம் உயர்வு குறித்து பொதுப்பணி துறை துணை செயலரும் நைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் முரணான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரில் உள்ள 44 கி.மீ., துாரம் கொண்ட நைஸ் ரோட்டில் சுங்க கட்டணம் இம்மாதம் 1ம் தேதி முதல் 7.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த கட்டண உயர்வை, அரசிடம் அனுமதி பெறாமலேயே, சாலையை நிர்வகிக்கும் நைஸ் நிறுவனம் அமல்படுத்தியது.

இதனால், பொதுப்பணித்துறை துணை செயலர் பார்வதி, நைஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், '1994ல் கர்நாடக அரசுக்கும், நைஸ் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, அரசின் அனுமதியின்றி சுங்க கட்டணம் உயர்த்தப்படக்கூடாது என உள்ளது. எனவே, சுங்க கட்டண உயர்வை ஏற்று கொள்ள முடியாது' என கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நைஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அசோக் கேனி கூறுகையில், ''1994ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படலாம். இருப்பினும் 7.5 சதவீதம் தான் உயர்த்தப்பட்டு உள்ளது,'' என்றார்.

Advertisement