ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை விழா வள்ளி கல்யாண உத்சவம் கோலாகலம்

தொம்மலுார்: ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம் விழாவில், வள்ளித்திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா நடந்து வருகிறது.

நேற்று காலையில் சாஸ்தா பிரீத்தி மஹோத்சவம் நடந்தது. 'பிரதோஷம் பூஜை குழு'வினர் சார்பில் ஸ்ரீ அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை சாஸ்தா பிரீத்தி, சாஸ்தா வரவு பாட்டு நடத்தப்பட்டது.

பிரதோஷம் பூஜை குழுவின் அனந்த நாராயணன் கூறியதாவது:

எங்கள் குழு சார்பில் பெங்களூரு முழுதும், மாதந்தோறும் இரண்டு பிரதோஷங்களில் பூஜைகள் செய்யப்படும். இன்று (நேற்று) ஸ்ரீவித்யா தொண்டு நிறுவனம் சார்பில் நடக்கும் விழாவில், சாஸ்தா பிரீத்தி நிகழ்த்தினோம்.

காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மஹன்யாசம், நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், ஆதில், நெய், பால், தயிர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம், விபூதி உட்பட 11 திரவியம் மூலம் சிவனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.

விளக்குகளை விநாயகர், அம்பாள், அய்யப்பனாக பாவித்து ஆவாஹனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அய்யப்ப சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின், சுவாமிக்கு நெய்வேத்யம், அன்னதானம் நடந்தது.

சாப்பிடும் இலை கட்டாக கட்டி வைக்கப்பட்டிருக்கும். இதை சுவாமி எடுத்து கொடுத்த பின்னரே, அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து மாலையில் முப்பெரும் விழா, ஹலசூரு தேவார, திருப்புகழ், அருட்பாராயண சபாவின் ஜூனியர் குழுவினரின் திருப்புகழ் பஜனை, ஹலசூரு திருப்புகழ் சுந்தரேசன் குழுவினரின் திரு அருட்பா நடந்தது.

மாலையில் ஜெயந்தி குழுவினரின் சங்கீதத்தில் வள்ளி கல்யாணம்; இரவில் வள்ளி கல்யாண மஹோத்சவம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு 'பகவத் பிரசாதம்' வழங்கப்பட்டது.

Advertisement