இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி; சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் நெகிழ்ச்சி!

1

சிங்கப்பூர்: இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது என சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த பின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.


சிங்கப்பூர் மற்றும் சீனாவிற்கு மூன்று நாள் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங்கை சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இது தொடர்பாக, ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே
பல்வேறு இருதரப்பு முயற்சிகளில் நிலையான முன்னேற்றத்தைக் கவனிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 3வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


சிங்கப்பூர் பயணத்தைத் தொடர்ந்து, ஜெய்சங்கர், சீன நகரமான தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா செல்வார். சீனாவில், நாளை (ஜூலை 14), நாளை மறுநாள் (ஜூலை 15) ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கிறது.

Advertisement