வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை; சடலத்தின் மீது நடனமாடிய கொடூரம்

12


டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கான்கிரீட் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சடலத்தின் மீது கொலையாளிகள் நடனம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவில் ஆட்சி கவிழ்ந்த பிறகு, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


இதுவரையில் 25க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் அதிகமான கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் சொல்லுகின்றன. இந்த சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள இந்தியா, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.



கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசத்தின் தினஜ்பூரில் பாபேஸ் சந்திர ராய் என்ற ஹிந்து மதத் தலைவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 9) பழைய டாக்கா பகுதியில் உள்ள மிட்போர்ட் மருத்துவமனை முன்பு, வியாபாரி லால் சந்த் சோஹாக்கிடம் பணம் பறித்த கும்பல், அவரை கான்கிரீட் கல்லால் அடித்துக் கொன்றுள்ளது.


பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைக் கண்டித்து வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைகளின் வளாகங்களில் மாணவர்கள் பேரணிகளை நடத்தினர். மேலும், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.


இந்தக் கொலை சம்பவத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனிடையே, சோஹாக் கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவரை கல்லால் அடித்து கொன்று விட்டு, அந்த கொலை கும்பல் அவரது சடலத்தின் நடனமாடிய கொடூர நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து வங்கதேச ஹிந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் கூறியதாவது; கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தற்போது வரையில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், மொத்தம் 2,442 மத வன்முறை சம்பவங்களை சந்தித்துள்ளனர், எனக் கூறியுள்ளது.

Advertisement