வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

சித்தாமூர்:சித்தாமூர் கிராமத்தில், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது.

சித்தாமூர் கிராமத்தில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பழமை வாய்ந்த வரசித்தி விநாயகர் திருக்கோவில் உள்ளது.

கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன.

திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 10ம் தேதி துவங்கின.

தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடந்தன.

நேற்று காலை 10:15 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும், 10:20 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

பின், வரசித்தி விநாயகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

சித்தாமூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Advertisement