சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு

23

சென்னை: புழல் பெண்கள் சிறையில், நைஜீரிய கைதியால் தாக்கப்பட்ட தலைமை காவலர் சரஸ்வதி, 'இது சிறை காவலர்களின் இருண்ட காலம்; இதற்கு, கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தான் காரணம்' என்று குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளால், சிறை காவலர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இதை யாரிடம் தெரிவித்தால், எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதற்கு, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தான் காரணம்.



வெளிநாட்டு கைதிகள், மொபைல் போன் வைத்திருந்தாலோ, அவர்கள் மற்ற கைதிகளை அடித்து பிரச்னை செய்தாலோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டு இருந்தாலும், தண்டனை தராமல் அவர்களிடம் சிரித்து பேசி மகிழ்கிறார். அவர்களை பார்ப்பதற்காகவே சிறைக்கு வருகிறார்.


அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும், கூடுதல் டி.ஜி.பி., வழங்கி உள்ளார். ஆனால், எந்த குற்றமும் செய்யாமல், நாங்கள் தான் கைதிகள் போல அடைக்கப்பட்டு உள்ளோம். வெளிநாட்டு கைதிகள் இரவில் நிர்வாணமாக திரிகின்றனர். நேற்று முன்தினம் புழல் பெண்கள் சிறையில், கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.


அப்போது தேவையில்லாமல், கைதி அறையில் இருந்து வெளியே வர முயன்ற, போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்ற, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மோனிகாவை, நான் தடுத்தேன்.


இதனால், என் மீது அவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். ரத்த வெள்ளத் தில் கிடந்த என்னை, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உதவிக்கு ஒரு காவலரை கூட அனுப்பி வைக்கவில்லை.


எங்கள் கூடுதல் டி.ஜி.பி., சிறை காவலர்கள் நலனை கருத்தில் கொள்வதே இல்லை. நான் சிறைத் துறையில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இது எங்களின் இருண்ட காலம். இதற்கு கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

சிறை தலைமை காவலர் சரஸ்வதி தாக்கப்பட்டது குறித்து, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement