ஆற்காடு சாலையை 100 அடி அகலமாக்க வளசரவாக்கம் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

வளசரவாக்கம்:வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், 60 அடி சாலையை 100 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போரூர் முதல் கோடம்பாக்கம் வரை குன்றத்துார், பூந்தமல்லி, கிண்டி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது ஆற்காடு சாலை. மொத்தமுள்ள 8 கி.மீ., துார சாலை ஆங்காங்கே 4 கி.மீ., துாரத்திற்கு மிகவும் குறுகலாக இருக்கிறது.

போரூர் - வளசரவாக்கம் சாலை 30 அடியாகவும், விருகம்பாக்கம் - வடபழனி இடையே 55 முதல் 60 அடி அகலத்திலும் உள்ளது. 'பீக் ஹவர்ஸ்' எனும் காலை, மாலை அலுவலக நேரங்களில், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த வாகன நெரிசலை தீர்க்கும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இரண்டாவது முழுமை திட்டத்தின் கீழ் இந்த சாலையை அகலப்படுத்த, சென்னை மாநகராட்சியிடம் 2008ல் பரிந்துரைத்தது.

இதையடுத்து, ஆற்காடு சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நில அளவீடு முடிந்து, அகற்றப்படும் கட்டடங்களில் குறியீடு செய்யப்பட்டது. பணி துவங்கும் நேரத்தில், அச்சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டதோடு, அச்சாலை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே அகலத்தில், தற்போதும் ஆற்காடு சாலை இருப்பதால், வாகன பெருக்கத்திற்கு ஏற்ப தாக்குப்பிடிக்க முடியாமல், நெரிசல் அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில் நிர்வாகம், தங்கள் பணிக்கு தேவைப்படும் அளவிற்கு ஏற்ப சாலை நடுவே, 7 அடி அகலத்திற்கு மெட்ரோ ரயில் துாண்கள், துாண்களில் இருந்து 23 அடி அகலத்திற்கு சாலை மற்றும் இருபுறமும் 5 அடி நடைபாதை என 60 அடி சாலையாக இருக்கும்.

ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் வாகன பெருக்கம் அதிகரித்து நெரிசல் ஏற்படும். எனவே, மெட்ரோ பணியின்போதே இச்சாலையை 100 அடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement