இளைஞர்களை குறிவைத்து மிரட்டும் இணையவழி மோசடி கும்பல்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி : ஆபாச படம் பார்த்ததாக இளைஞர்களை குறிவைத்து மிரட்டும் இணையவழி மோசடி கும்பல், குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மற்றும் ஆண்களை குறி வைத்து, மர்மநபர்கள் நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படங்களை ஆன்லைன் வழியாக பார்த்து உள்ளீர்கள்.

அல்லது பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள். அது இணைய வழி சட்டப்படி குற்றம்.

அதற்காக, உங்கள் மீது சைபர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என, சைபர் மோசடி கும்பல் இளைஞர்களை மிரட்டி வருகின்றனர்.

இதுதொடர்ந்து, இதுவரையில் 5க்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது.

அதில், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். உங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் என, கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் மேற்படி நபர்கள் போலீசார் இல்லை என்பதும், சைபர் மோசடிக்காரர்களின் வேலை என்பதும் தெரிய வந்துள்ளது.

மொபைல், வாட்ஸ் ஆப் ஆடியோ கால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்பவர்கள் உண்மையான போலீசாரா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

இதுபோன்று யாரேனும் தொடர்பு கொண்டால், சைபர் போலீஸ் நிலையத்தின் இலவச மொபைல் எண் 1930 மற்றும் 0413 -2276144, 9489205246, மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். சைபர் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை அனுப்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

Advertisement