'தொன்னே' பிரியாணியில் முத் திரை பதித்த சகோ தரிகள்

பெங்களூரை சேர்ந்தவர்கள் சகோதரிகள் ரம்யா, ஸ்வேதா. பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக் கழகத்தில் பி.காம்., முடித்த ரம்யா, வெளிநாட்டில் படிக்க சென்றார். அங்கு படிப்பை முடித்த பின், விருந்தோம்பல் துறையில் உள்ள பல நிறுவனங்களில் பணியாற்றினார்.

அதுபோன்று, ஸ்வேதா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்த அவர், லண்டன் வார்விக் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

இவர்களின் குடும்பம் பல தலைமுறையாக ஹோட்டல் தொழில் நடத்தி வருகின்றனர். இதனாலேயே இத்தொழில் மீது இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது.

'தொன்னே பிரியாணி' கர்நாடகாவின் பூர்வீகமாகும். பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி, கொல்கட்டா சிக்கன் பிரியாணிகள் கிடைக்கின்றன. ஆனால், சில இடங்களில் மட்டுமே தொன்னே பிரியாணி கிடைக்கின்றன.

விருந்தோம்பல் துறையில் ஈடுபாடு கொண்ட இருவரும், தொன்னே பிரியாணி துவங்குவது குறித்து ஆலோசித்து, இன்று ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வெற்றி பெற்றுள்ளனர்.

தங்கள் வெற்றி கதையை, அவர்களே கூறியதாவது:

சிறு வயதில் எங்கள் பாட்டி, அடிக்கடி தொன்னே பிரியாணி செய்து கொடுப்பார். அதன் சுவை, நறுமனம்... ப்பா... அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால், தொன்னே பிரியாணிக்கு பூர்வீகமான கர்நாடகாவில், இது கிடைக்காதது வருத்தம் அளித்தது.

எங்கள் குடும்பம் ஏற்கனவே ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளதால், இதன் நெளிவு சுளிவுகள் தெரிந்தது. நாங்கள் அனுபவித்த தொன்னே பிரியாணியின் ருசியை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 'கிளவுட் கிட்சன்' துவங்க தோன்றியது.

எனவே, எங்களின் தாத்தாவின் பெயர் 'ராமசாமி', தந்தையின் பெயர் 'ரவிசந்திரன்' ஆகியோரின் முதல் எழுத்தில், 2020ல் நாகரபாவியில் 'ஆர்.என்.ஆர். தொன்னே பிரியாணி'யை, 5 லட்சம் ரூபாய் முதலீட்டில், 200 அடி 'கிளவுட் கிச்சன்' அறையில் துவக்கினோம்.

கொரோானா காலகட்டத்தில் துவங்கியபோதும், முதல் மாதத்திலேயே 10,000 ஆர்டர்கள் கிடைத்தன. அன்று முதல் நாங்கள் திரும்பி பார்க்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இன்று நகரில் 14 கிளவுட் கிட்சனும், ஒரு ரெஸ்டாரெண்டும் துவக்கி உள்ளோம்.

தொன்னே பிரியாணிக்காக சீரக சம்பா அரிசி தான் பயன்படுத்துகிறோம். சில மூலப்பொருட்கள் சேர்ப்பதால், சாதம் பச்சை நிறமாக இருக்கும். மற்ற பிரியாணிகளுக்கு என்னென்ன விற்பனை யுக்திகள் பயன்படுத்தப்படுகிறதோ, அதே யுக்தியை நாங்களும் பயன்படுத்துகிறோம்.

அதுபோன்று, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவில் எந்த குறையும் இருக்க கூடாது என்பதற்காக சுகாதார முறையில், தரத்துடன் வினியோகித்து வருகிறோம்.

இதற்காகவே சிறந்த முறையில் பாக்சில் வைத்து வினியோகித்து வருகிறோம். இதற்கும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது. இப்போது சைவ பிரியாணியும் வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement