அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்

சிவகங்கை: மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை தொடங்கியது.


சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். அவரை விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இதையடுத்து கோயில் பசு மடத்தில் வைத்து அஜித்குமாரை தனிப்படை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணையை துவக்கினர். உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை, வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.

சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித் குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, இன்று சம்பவம் நடந்த கோவில் பசுமடம், பார்க்கிங், திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரும் விசாரணைக்குழுவிடம் உரிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

Advertisement