ரூ.25,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர்: விரட்டி சென்று மடக்கி பிடித்த போலீசார்

3


ஓசூர்: ஓசூரில், 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு தப்பியோடிய மாநகராட்சி பில் கலெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி ஆர்.ஆர்., நகரை சேர்ந்தவர் மாது, 60. அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தில் பொருளாளராக உள்ளார்.


அவர் தனது மனைவி துளசிமணி பெயரில் உள்ள காலி வீட்டு மனைக்கு, ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து வரி ரசீது பெற்று தரக்கோரி, சங்க தலைவர் பிரபுவை தொடர்பு கொண்டு ஆவணங்களை வழங்கினார்.
கடந்த வாரம் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற பிரபு பில் கலெக்டர் ரஜினியிடம் ரசீது கேட்டார். நேரில் சென்று வீட்டு மனையை பார்வையிட்ட பில் கலெக்டர் ரஜினி, 75,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் காலி மனைக்கான வரி ரசீது வழங்க முடியும் என கூறியுள்ளார்.

முதல் தவணையாக 25,000 ரூபாயும், வேலை முடிந்த பின் மீதமுள்ள, 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என பில் கலெக்டர் ரஜினி நிபந்தனை விதித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு, மாது பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய 25,000 ரூபாயை வாங்கிய பிரபு, ஓசூர் நல்லுார் போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே வைத்து நேற்று பில் கலெக்டர் ரஜினியிடம் வழங்கினார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் எஸ்.ஐ., மஞ்சுநாத் மற்றும் போலீசார், பில்கலெக்டர் ரஜினியை கையும், களவுமாக பிடித்தனர். போலீசாரிடம் இருந்து அவர் தப்பியோடிய நிலையில் விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர். இதில் பில் கலெக்டர் ரஜினிக்கு கால்களில் காயம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement